வைரமுத்து எழுதிய பாடலை முதலில் பாட மறுத்த எஸ்பிபி... ஆனா அதுதான் வேற லெவல் ஹிட்..!

by Sankaran |   ( Updated:2024-12-20 03:31:04  )
vairamuthu spb
X

கண்ணதாசனை 'கவியரசர்' என்கிறார்கள். ஆனால் வைரமுத்துவை 'கவிப்பேரரசர்' என்கிறார்கள். இருவருமே சிறந்த கவிஞர்கள் தான். முன்னவர் நம் தாத்தா பாட்டி காலத்தைக் கட்டிப் போட்டிருந்தார். பின்னவர் 80, 90ஸ் குட்டீஸ்களையும் கட்டிப் போட்டு இருந்தார். ஆனால் இருவரின் பாடல்களும் இப்போது கேட்டாலும் நம்மை ரசிக்க வைக்கும் என்பதுதான் இவர்களின் தனித்துவம்.

அந்த வகையில் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி.யையே மிரண்டு போக வைத்துவிட்டது. அது என்ன பாடல்? என்ன படம் என்று பார்க்கலாமா...

1999ல் அஜீத், ஷாலினி நடிப்பில் வெளியான படம் அமர்க்களம். சரண் இயக்கிய இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்தின் கதை சுவாரசியமாக இருந்தது. ஒரு ரவுடி காதல்வயப்பட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.

படத்தில் அஜீத்குமார், ஷாலினி, நாசர், ரகுவரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின்போது தான் அஜீத், ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து அவர்களும் திருமணம் செய்து கொண்டனர்.


அமர்க்களம் படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அவற்றில் ஒரு முக்கியமான பாடல் தான் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'. இந்தப் பாடல் உருவான விதம் சுவாரசியம்.

ஒருமுறை வைரமுத்து காரில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு வந்த ஒரு பார்சலைப் பிரித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர் 'கவிஞரே இதுல இருந்து பூதம் கிளம்பினா என்ன செய்வீங்க? அதுகிட்ட என்ன கேட்பீங்க'ன்னு கேட்டுள்ளார்.

அப்போது கவிஞருக்கு மனதில் தோன்றியது தான் இந்தப் பாடல். இதைப் படித்துப் பார்த்ததும் இயக்குனர் சரண் 'தனது கதையின் நாயகனுக்கும், அதே போல பாடல் தேவைப்படுகிறது. இந்தப் பாடலை அப்படியே படத்தில் வைங்க'ன்னு சொல்கிறார். அதற்கு இந்தப் பாடலை பரத்வாஜ் பாடியே காட்டுகிறார். ஆனா இவ்ளோ பெரிய பாட்டை யார் பாடுவாங்கன்னு அவங்களுக்கே சந்தேகம் வருது.

அப்புறம் எஸ்பிபி தான் இதற்கு சரியான ஆள்னு நினைச்சி அவரிடம் பேசுறாங்க. ஆனா பாடலைப் பார்த்ததும் அவர் மிரண்டு போய்விட்டார். 'இவ்ளோ பெரிய பாடலை எல்லாம் என்னால பாட முடியாது'ன்னு சொல்லி விட்டார். அப்புறம் எஸ்பிபியை பரத்வாஜ், எப்படியோ சமாதானப்படுத்திப் பாட வைத்து விட்டார்.

பாடலைப் பாடும்போது அருகில் இருந்து கேட்ட இயக்குனர் சரண் பாடலைப் பாடி முடித்ததும் எஸ்பிபி காலில் விழுந்து வணங்கினாராம். அடேங்கப்பா எவ்ளோ பெரிய பாடலை இவ்ளோ அற்புதமா பாடிட்டாரு எஸ்பிபின்னு அனைவருக்குமே பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது என்றால் மிகையில்லை.

Next Story