குணா படத்துக்கு அந்த தலைப்பு எப்படி வந்தது தெரியுமா?!. இண்ட்ரஸ்டிங் பிளாஷ்பேக் இருக்கு!..
Guna Movie: சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1991ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் குணா. இந்த படத்தில் குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக கமல் நடித்திருந்தார். அவரை போல மனநிலை பாதிக்கப்பட்ட அவரின் குரு போன்ற ஒருவர் ‘அபிராமி உன்னைத் தேடி வருவாள். கல்யாணம் பண்ணிக்கோ’ என சொன்னதால் அதையே நினைத்து கொண்டிருப்பார் கமல்.
குணா கதை: அப்போது கோவிலுக்கு அன்னதானம் செய்ய வரும் பணக்கார பெண்ணான ரோஷ்னியை பார்த்து அவர்தான் அபிராமி என நினைத்துகொண்டு அவரை கடத்திக்கொண்டு கொண்டுபோய் கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு இடிந்துவிழுந்த வீட்டில் சிறை வைப்பார் கமல். முதலில் அவரிடமிருந்து தப்பிக்க நினைத்தாலும் போகப்போக கமலின் அன்பை புரிந்துகொண்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுப்பார் ரோஷ்ணி.
கமலை தேடி போலீசும், ரோஷ்ணியை தேடி ஒரு கும்பலும் மலைக்கு வர அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. மனநிலை பாதிக்கப்பட்டவனின் தூய்மையான அன்பு எந்த அளவுக்கு செல்லும் என கமல் இதில் அற்புதமாக நடித்து காட்டியிருப்பார். இந்த படத்தில் இளையராஜா போட்டு கொடுத்த அனைத்து பாடல்களுமே மனதை மயக்கும் மெலடிதான்.
அதிலும், அவர் போட்ட ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை இப்போதும் குழந்தைகள் கூட பாடுகிறார்கள். இந்த பாடலை வைத்து மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற படத்தை எடுத்து பல கோடிகள் அள்ளினார்கள். இந்நிலையில், குணா படத்திற்கு அந்த தலைப்பு எப்படி வந்தது என பார்ப்போம்.
குணா படத்திற்கான பாடல் கம்போசிங்கிற்காக சந்தானபாரதியும், கமலும் இளையராஜாவை சந்தித்திருக்கிறார்கள். அப்போது படத்திற்கு என்ன தலைப்பு என அவர்கள் ஆலோசித்தபோது ‘அபிராமி என்கிற தலைப்பு பரீசீலனையில் இருக்கிறது’ என கமல் சொல்ல ‘அது நல்ல தலைப்புதான்.. சாமியை சொல்வது போல இருக்கிறது’ என இளையராஜா சொல்லியிருக்கிறார்.
இளையராஜா: அப்போது கமல் ‘அது இல்லாமல் வேறு ஒரு தலைப்பு வைக்கலாமா என்கிற எண்ணமும் இருக்கிறது’ என சொல்ல இளையராஜா ‘படத்தின் கதை கதாநாயகன் மீது பயணிக்கிறதா இல்லை கதாநாயகி மீது பயணிக்கிறதா?’ என கேட்க, கமல் ‘கதாநாயகன் மீதுதான். ஆனால், அவனின் பெயர் குணசேகரன். அப்படி வைத்தால் நன்றாக இல்லை. பழைய பெயர் போல இருக்கிறது’ என சொல்ல, அப்படியெனில் அதை சுருக்கி ‘குணா’ என வைத்திவிடுங்கள் என இளையராஜா சொல்ல ‘குணா நல்லாருக்கு’ என எல்லோரும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த விஷயத்தை கமல், சந்தானபாரதி, இளையராஜா மூவரும் விவாதித்த போது அதை ரெக்கார்ட் செய்த கங்கை அமரன் குணா படத்தின் ஆடியோ லிஸ்ட்டில் அதை சேர்த்திருக்கிறார். அதை கேட்டதில்தான் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. அபிராமி என்கிற தலைப்புக்கு முன்பு ‘மதிகெட்டான் சோலை’ என்கிற தலைப்பும் கமல் மனதில் இருந்திருக்கிறது. அதன்பின் அது வேண்டாம் என விட்டுவிட்டாராம். நல்லவேளையாக இளையராஜா மூலம் ‘குணா’ என்கிற நல்ல தலைப்பு கிடைத்தது. அந்த படம் எடுக்கப்பட்ட கொடைக்கானல் குகைக்கு ‘குணா குகை’ என்கிற பெயரும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.