இளையராஜா இசையில் முதல் பாடல்!.. கமல் பாடியதன் பின்னணியில் இப்படி ஒரு கதையா?!...

by Murugan |
kamal
X

Ilayaraja: இளையராஜாவின் இசையில் நடிகர் கமல் பல பாடல்களை பாடியிருக்கிறார். பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் பாடிய ‘நினைவோ ஒரு பறவை’தான் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய முதல் பாடல். இளையராஜா பெரும்பாலும் ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்த பின்னர்தான் யார் பாடுவது என முடிவெடுப்பார்.

பெரும்பாலும் ஆண் பாடகர் எனில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகி என்றால் எஸ்.ஜானகி என எழுதிவிடுவார். ஒருவேளை எஸ்.பி.பி ஊரில் இல்லையென்றால் மலேசியா வாசுதேவன் வந்து பாடுவார். அவரும் இல்லையெனில் மனோ பாடுவார். எஸ்.பி.பி அப்போதே வெளிநாடுகளுக்கு சென்று ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுவார்.


அதுபோன்ற சமயங்களில் அந்த வாய்ப்பு மலேசியா வாசுதேவன் அல்லது மனோவுக்கு போய்விடும். அதேபோல், எஸ்.ஜானகி இல்லையெனில் அந்த வாய்ப்பு சித்ராவுக்கு போகும். சிகப்பு ரோஜாக்கள் படம் உருவானபோது ‘நினைவோ ஒரு பறவை’ பாடலை ஒலிப்பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் இளையராஜா.

பாடல் ஒலிப்பதிவு நடப்பது தெரிந்து ரிக்கார்டிங் தியேட்டருக்கு போனார் கமல். அப்போது எப்படி பாட வேண்டும் என இளையராஜா சொல்லிக் கொடுப்பதை அருகில் இருந்த கமல் கவனித்து பாடிக்கொண்டே இருந்தார். இதைப்பார்த்த இளையராஜா ‘நீங்களே இந்த பாட்டை பாடிடுங்க’ என சொல்ல கமலும் ‘சரி பாடுகிறேன்’ என சொல்லி பாடிவிட்டார்.


அந்த பாடலை கமல் அசத்தலாக பாடி முடித்தபின் ‘என்ன கமல் பாடிட்டீங்க’ என இளையராஜா ஆச்சர்யப்பட கமல் ‘நீங்க பாட சொன்னீங்க.. நான் பாடிட்டேன்’ என சொல்லியிருக்கிறார். இதை சமீபத்தில் இளையராஜாவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். உண்மையில் அந்த பாடலை மலேசிய வாசுதேவனை வைத்து ஒலிப்பதிவு செய்யவே இளையராஜா நினைத்திருந்தார். ஆனால், பாடியது கமல்.

பின்னாளில் ராஜாவின் இசையில் கமல் பாடிய தென் பாண்டி சீமையிலே, கண்மணி அன்போடு காதலன், இஞ்சி இடுப்பழகி, போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி போன்ற எல்லா பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ‘நடிகர்களில் சிறப்பாக பாடும் திறமை கொண்டவர் யார்?’ என்கிற கேள்விக்கு இளையராஜாவின் பதில் ‘கமல்’ என்பதாகவே இருக்கிறது.

Next Story