நீ ஹீரோடா!.. கண்டிப்பா வேறலெவலுக்கு போவ!.. அஜித்துக்கு நம்பிக்கை சொன்ன நடிகர்!...
Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அஜித். இவர் அவ்வளவாக படிக்கவில்லை. 8ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கு போனதாக சொல்லப்படுகிறது. பைக் ஓட்டுவது, பைக் மெக்கானிசம் பற்றிய ஆர்வம் என அவரின் ஆசை வேறாக இருந்தது. மாடலிங் துறையில் கொஞ்சம் ஆர்வம் வர சில விளம்பர படங்களிலும் நடித்தார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் இவரின் பள்ளி தோழர். எனவே, எஸ்.பி.பி மூலம்தான் அஜித்துக்கு தெலுங்கில் முதல் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னரே அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. துவக்கத்தில் சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்தார்.
அதன்பின் காதல் கலந்த ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். ஒருகட்டத்தில் பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். இந்த 2 படங்களும்தான் அவருக்கு அதிக ரசிகர்களை உருவாக்கியது.
ரசிகர்கள் இவரை 'தல' என அழைக்க துவங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்புதான் என்னை அப்படி அழைக்க வேண்டாம் என கோரிக்க வைத்தார். அதேபோல், 'கடவுளே அஜித்தே' என்கிற முழக்கமும் பட இடங்களிலும் ஒலிக்க துவங்கியது. எனவே, அப்படி செய்ய வேண்டாம் என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.
விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அஜித்தின் மீது எல்லோரின் கவனமும் இருக்கிறது. இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில், விடாமுயற்சி படம் 2025 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அஜித் இப்போது இந்த இடத்தில் இருந்தாலும் துவக்கத்தில் 'தனக்கெல்லாம் இப்படி ரசிகர்கள் கிடைப்பார்களா?.. தன்னிடம் ஆட்டோகிராப் வாங்குவார்களா?. நாமும் ஒரு பிரபலமான நடிகராக மாறுவோமா?' என்கிற ஏக்கம் அவருக்கு இருந்தது. இதுபற்றி நடிகர் தலைவாசல் விஜய் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
அமராவதி படத்தில் அஜித்துடன் நடித்தேன். கதை விவாதங்களுக்கு அஜித் வருவார். அங்கு நானும் போவேன். இருவரும் சேர்ந்து தியேட்டர்களுக்கு போய் சினிமா பார்ப்போம். தியேட்டரில் அமராவதி படம் பார்க்க போனோம். அதற்கு முன்பே நான் தலைவாசல் திரைப்படம் மற்றும் நீலா மாலா டிவி தொடரில் நடித்திருந்ததால் என்னை சிலருக்கு தெரிந்திருந்தது. எனவே, என்னை பார்த்து பேசினார்கள்.
அதைப்பார்த்த அஜித் ‘விஜி என்னையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?. எனக்கும் இந்த அங்கீகாரம் கிடைக்குமா?’ என ஏக்கத்துடன் கேட்டார். ‘என்னடா இப்படி கேட்குற? நீ ஹீரோடா!. கண்டிப்பாக நீ ஒரு பெரிய இடத்துக்கு வருவ’ என அவரிடம் அப்போது சொன்னேன். அதை அவர் நிரூபித்தும் காட்டிவிட்டார்’ என பேசியிருக்கிறார். காதல் கோட்டை படத்தில் அஜித்தின் நண்பனாக தலைவாசல் விஜய் நடித்திருப்பார்.