தளபதி படத்தால் வந்த நஷ்டம்!.. ரஜினியிடம் அழுத வினியோகஸ்தர்!.. ஒரு பிளாஷ்பேக்!...
Rajini Thalapthy: ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் தளபதி முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் வழக்கமான ரஜினி இதில் இருக்கமாட்டார். வழக்கமாக ரஜினி படங்களில் வரும் பில்டப் காட்சிகள், ஸ்டைல், பன்ச் வசனங்கள், மாஸ் காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இருக்காது. அதற்கு காரணம் இந்த படத்தை இயக்கிய மணிரத்னம்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவரின் படங்களில் பெரிதாக வசனங்கள் இருக்காது. ரத்தனசுருக்கமாக அதே சமயம் நச்சென வசனங்கள் இருக்கும். முடிந்தவரை ஒரு காட்சியை விஸ்வலாக சொல்லவே அவர் முயற்சி செய்வார். தளபதி படமும் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருந்தது.
மகாபாரதத்தில் வரும் துரியோதனன் - கர்ணன் இடையேயான நட்பை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்கிற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தனர். மேலும், ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், அரவிந்த்சாமி, ஷோபானா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
பாலிவுட் நடிகர் அம்ரிஷ் பூரி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் 1991ம் வருடம் வெளியானது. இந்த பட்டத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார் இளையராஜா. குறிப்பாக சின்னத் தாயவள், சுந்தரி கண்ணால் ஒரு சேதி, காட்டுக்குயிலு மனசுக்குள்ள, ராக்கம்மா கையை தட்டு பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ரஜினியை ரசிக்கும் எல்லோருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தை மணிரத்னத்தின் அண்ணன் ஜிவி தயாரித்திருந்தார். இந்நிலையில், இந்த படம் பெரிய லாபம் இல்லை என வினியோகஸ்தர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.
4.15 லட்சம் கொடுத்து வாங்கி தளபதி படத்தை ரிலீஸ் செய்தேன். ஆனால், ஒன்னே கால் லட்சம்தான் கிடைத்தது. 3 லட்சம் நஷ்டம். ரஜினி சாரை சந்தித்து இப்படி ஆகிவிட்டது என அழுதேன். ‘வருத்தப்படாதீர்கள். அடுத்து மன்னன் படம் பண்ணுகிறேன். அதை உங்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்க சொல்கிறேன்’ என சொன்னார்’ என அந்த வினியோகஸ்தர் சொல்லி இருக்கிறார்.