சிவாஜி படத்தில் நடிக்க அவரை விட அதிக சம்பளம் தருவதாக சொல்லியும் மறுத்த நடிகர்... யாருன்னு தெரியுதா?
தமிழ்சினிமா உலகில் ஒருகாலகட்டத்தில் காதல் படங்கள் கொடிகட்டிப் பறந்தன. அதுல குறிப்பா சொல்லணும்னா அம்பிகாபதியைச் சொல்லலாம். இது ஒரு காவிய காதல். இந்தக் கதைக்காகவே 3 தடவை இதே பெயரில் படங்கள் வந்துவிட்டன. இந்தப் படத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று உள்ளது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
1937ல் வெளியான அம்பிகாபதிக்கும் 1957ல் வெளியான அம்பிகாபதிக்கும் என்ன வித்தியாசம்னு ஒரு ரசிகர் கேட்க அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.
1937ல் அம்பிகாபதி படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்தார். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் ஒரு ஆண்டுக்கு மேலாக ஓடி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பிறகு 1957ல் மீண்டும் அம்பிகாபதி கதை திரைக்கதையாக உருவாக்கப்பட்டது. அதில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி கணேசன். அந்தப் படத்தை இயக்கியவர் ப.நீலகண்டன். தயாரித்தது ஏ.எல்.சீனிவாசன்.
அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் ஒரு புதுமையான ஐடியா ஏஎல்.சீனிவாசனுக்கு வந்தது. அதாவது 1937ல் அம்பிகாபதி படத்தில் நடித்த எம்.கே.தியாகராஜ பாகவதரை இந்தப் படத்தில் சிவாஜியின் தந்தையாக கம்பர் வேடத்தில் நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அவரது ஐடியா.
உடனடியாக எம்கே.தியாகராஜ பாகவதரை சீனிவாசன் அணுகினார். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் பாகவதருக்கு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. அதை வெளிப்படையாகவே அவரிடம் சொன்னார். 'அம்பிகாபதியாக நடித்த நான், கம்பராக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள்' என்று பாகவதர் சீனிவாசனிடம் சொன்னாராம்.
ஏதோ சம்பளத்துக்காகத் தான் நடிக்கத் தயங்குகிறாரோ என்று நினைத்த சீனிவாசன், 'இந்தப் படத்தில் கம்பர் வேடத்தில் நீங்க நடிக்க எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயார்' என்றாராம். இன்னும் ஒருபடி மேல போய் 'சிவாஜிக்குக் கொடுக்குற சம்பளத்தை விட அதிகமாக நீங்க கேட்டீங்கன்னா அதையும் தரத் தயார்' என்றாராம்.
ஆனாலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பாகவதர் கடைசி வரை ஒத்துக் கொள்ளவில்லை. அவர் மட்டும் ஒத்துக்கொண்டால் அந்தப் படமே வேற லெவல்தான் என்கிறார் சித்ரா லட்சுமணன்.