இந்தப் படத்துல எல்லாமே தமிழ்.. ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ் இல்ல.. அட மாதவன் படமா?
தமிழ் சினிமாவில் நடிகைகளின் குரல்கள் பல படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் தன்மைகொண்டதாக இருக்கும். அதற்கு பின்னணியில் டப்பிங் கலைஞர்களின் மேஜிக்தான் காரணம். அந்த வகையில் பிரபல டப்பிங் கலைஞரான சவிதா இயக்குனர் சீமான் படத்தில் டப்பிங் பேசியதை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்திற்கு திரிஷாவுக்கு டப்பிங் பேசியது சவிதாதான்.
சீமான் இயக்கத்தில் மாதவன் மற்றும் பாவனா நடிப்பில் வெளியான ‘வாழ்த்துக்கள்’ என்ற படத்தில் டப்பிங் பேசும் போது தமிழ் பற்று என்றால் என்ன என்பதை அப்பொழுதுதான் புரிந்து கொண்டேன் என சவிதா கூறினார். அதுவரை காதுகளில் கேட்டு பழக்கமான எனக்கு நேரில் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது என கூறினார். மேலும் அவர் என்ன கூறினார் என்பதுதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
இந்த படத்துல எல்லாமே தமிழ். ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை. நிறைய பேரு தமிழ் பற்று தமிழ் பற்று அப்படினு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையான தமிழ் பற்று என்பதை நான் என்னுடைய தொழில் முறையில் பார்த்தது இயக்குனர் சீமான்கிட்டத்தான். டப்பிங் ஆரம்பிக்கும் போது அசிஸ்டெண்ட் டைரக்டர் கதை எல்லாம் சொல்லிவிட்டு நான் ஸ்டூடியோ உள்ளே போயிட்டேன்.
ஒரு அசோசியேட்டிவ் டைரக்டர் வந்து கதை சுருக்கம் சொல்லவா அப்படினு கேட்டாரு. உடனே நான் சொல்லுங்க சாருனு சொன்னேன். உடனே அவர் கதையெல்லாம் சொன்னாரு. அதன் பிறகு இந்தாங்க தாள் என்று சொல்லி நீட்டினார். அது வேற ஒன்னும் இல்ல. டையலாக் பேப்பரைத்தான் தாள் என்று சொல்லி நீட்டினாரு. உடனே நான் ரெடியா டேக் போலாமானு கேட்குறேன்.
உள்ளே இருந்து ஒரு குரல். தயார்னு கேட்குது. மேலும் வணக்கம் செல்வி சவிதா அவர்களே என்றும் அந்த குரல் சொல்லுது. செல்வி சவிதாவானு அப்படியே திரும்பி பார்க்கிறேன். அங்கு சீமான் உட்கார்ந்திருக்கிறார். நான் உடனே ரெடி சாருனு சொன்னேன். அதற்கு அவர் தயாரா என கேட்க நானும் ரெடினு சொன்னேன். மீண்டும் தயாரா என்று கேட்க அதன் பிறகுதான் தயார் சார் என்று சொன்னேன்.
இருந்தாலும் அவர் விடல. சாரா? என்று கேட்டார். பின் தயார் என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டேன். அதன் பிறகு சவுண்ட் இன்ஜினியர் உள்ளே இருந்து பதிவு என்று மட்டும் சொன்னார். அதாவது ரிக்கார்டிங் டேக் அப்படி சொல்வதற்கு பதிலாக தமிழில் பதிவுனு சொன்னாரு. யார் அப்படி சொல்றதுனு திரும்பி பார்த்தா உள்ளே இருந்து ஒளிப்பதிவாளருனு தன்னை பெருமையாக சொல்லிக் கொண்ட ஒரு நபர்.
ஆக மொத்தம் இந்தப் படத்தில் இருந்த அத்தனை பேரும் தமிழிலேயே பேசிக் கொள்கிறார்கள். நம் வாழ்க்கையில் எவ்வளவு ஆங்கிலம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது அப்பொழுதுதான் புரிந்தது. தமிழையே மறந்துட்டோம் என்றும் தெரிந்தது. அந்தப் படத்தில்தான் எனக்கு தமிழின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார் சீமான்.