படத்துல அந்த சீனைப் போயா தூக்குவாங்க... தேவாவின் மானம் கப்பல் ஏறிடுச்சே...!

by Sankaran |   ( Updated:2024-12-11 13:01:02  )
deva
X

தமிழ்சினிமா உலகில் இசையில் தனக்கென தனி இடம் பிடித்து வெற்றிக் கொடியை நிலைநாட்டியவர் தேவா. ரஜினிக்கு டைட்டில் கார்டுக்காக மியூசிக் போட்டதில் இருந்தே இவரது கெரியரில் டாப் கியரில் எகிற ஆரம்பித்தது.

சூரியன்

முன்னதாக சுப்ரீம்ஸ்டார் சரத்குமாரின் சூரியன் படத்துக்கு இவர்தான் இசை அமைத்து இருந்தார். அந்தப் படத்தின்போது நடந்த சுவையான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

1992ல் வெளியான இந்தப் படத்தில் சரத்குமார், ரோஜா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சரத்குமார் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் படத்துக்காக மொட்டை அடித்து நடித்திருப்பார். பவித்ரன் இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தைத் தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கவுண்டமணி, ஓமக்குச்சி நரசிம்மனின் காமெடி சூப்பராக இருக்கும்.

சூப்பர்ஹிட் பாடல்கள்

suriyan movie

படத்தை அப்போதே 30லட்சத்துக்கும் மேல் செலவழித்து எடுத்து இருந்தனர். மொத்த வசூலைப் பார்த்தால் 80லட்சத்துக்கு மேல் வாரிக் குவித்துள்ளது. இந்தப் படத்தில் தேவாவின் இன்னிசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். லாலாக்கு டோல், கொட்டுங்கடி கும்மி, பதினெட்டு வயது, மன்னாதி மன்னர்கள், தூங்கு மூஞ்சி ஆகிய பாடல்கள் உள்ளன. இதுல வந்த ஒரு பாடல் குறித்து தேவா என்ன சொல்றாருன்னு பாருங்க..

கந்த சஷ்டி கவசம் பாணி

இந்தப் பாடல்களில் 18 வயது பாடலை வாரி எழுதி இருந்தார். இந்தப் பாடலை கந்த சஷ்டி கவசம் பாணியில் எழுதுவது போல படமாக்கப்பட்டு இருந்தது. அதற்காக சரத்குமார், ரோஜா நடித்த காட்சியில் வசனம் ஒன்று பாடலை சார்ந்து வரும். அதாவது அன்று இருவருக்கும் கல்யாணம் முடிந்து முதல் இரவு.

காக்க காக்க...

அப்போது சரத்குமார் அவரது வீட்டில் உள்ள பழைய டிரான்சிஸ்டரில் பாடல் கேட்டுக் கொண்டு இருப்பார். அதில் 'காக்க காக்க கனகவேல் காக்க' என்ற கந்த சஷ்டி கவசம் பாடிக் கொண்டு இருக்கும். இது சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல். இதைக் கேட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் சரத்குமாரைப் பார்த்து ரோஜா இப்படிக் கேட்பார்.

suriyan movie

'என்னய்யா நீ திண்ணையில உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்டுட்டு இருக்கே... உள்ள வாய்யா நான் பாடுறேன்' கந்த சஷ்டி கவசம்னு கையைப் பிடிச்சி இழுப்பாரு... அதுதான் சீன். அதுக்கு ஏத்த மாதிரி பாடலின் இருவரிகளை 18 வயது பாடலில் வைத்து இசை அமைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டனர்.

18 வயசு இளமொட்டு மனசு

இதனால் என்னிடம் 18 வயசு இளமொட்டு மனசு என இரண்டு வரிகளை மட்டும் கந்த சஷ்டி கவசம் ராகத்தில் கொண்டு வந்து பின் இசையை மாற்றி விடுங்கன்னு சொன்னார்கள். அதனால் நானும் அதே போல இசை அமைத்தேன்.

ஆனால் ரிலீஸ் ஆகுற போது படத்துல நீளம் பெரிசா இருக்குன்னு அந்த சீனைக் கட் பண்ணிட்டாங்க. படம் பார்த்தவங்க குழம்பிட்டாங்க. எதுக்காக இந்தப் பாட்டைக் கந்த சஷ்டி கவசத்துல போட்டுருக்காங்க...ன்னு என்னைத் திட்டிட்டாங்க. என்னோட மரியாதையே போச்சு.

மானம் கப்பல்

அந்தப் படத்துக்குப் பிறகு எனக்கு அவ்ளோ சிக்கல்கள் வந்தது. பாட்டுல இருந்து இசையைத் திருடுறது, அப்படி இப்படின்னு பல விமர்சனங்கள் வந்தன. அந்த 2 நிமிஷ வசனத்தை மட்டும் தூக்காம இருந்தா எனக்கு இந்த நிலைமை வந்துருக்காது என்கிறார் தேனிசைத் தென்றல் தேவா.

Next Story