ஒரே பாடல்ல ரெண்டு புதுமைகள்... அசத்தோ அசத்துன்னு அசத்திய இளையராஜா!

இசைஞானி இளையராஜா தமிழ்த்திரை உலகிற்குள் நுழைந்ததும் திரையிசைப் பாடல்கள் புத்துணர்வு பெற்றன. 80ஸ் குட்டீஸ்களுக்கு இவரது பாடல்கள் இன்றளவும் ஒரு வரப்பிரசாதம்தான். அதையும் தாண்டி இப்போது 2கே கிட்ஸ்களும் இவரது இசையை விரும்பிக் கேட்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
எத்தனையோ இசை அமைப்பாளர்கள் இவருடைய வருகைக்குப் பிறகு வந்தாலும் இளையராஜாவின் இசைக்கு என்றுமே தனி மவுசுதான். அதற்குக் காரணம் அவரது காலத்தால் அழியாத காவியப்பாடல்கள்தான். ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு புதுமை, நுட்பத்தைப் பயன்படுத்தி இருப்பார். அந்த வகையில் ஒரே பாடலில் இரு விதமான புதுமையைக் கொண்டு வந்துள்ளார். வாங்க அது என்னன்னு பார்க்கலாம்.
பூந்தளிர்: 'வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...' என்ற சூப்பர்ஹிட் காதல் மெலடி பாடலை 80ஸ் குட்டீஸ்கள் கேட்டுருப்பாங்க. இது பூந்தளிர் என்ற படத்தில் இடம்பெற்றது. இரட்டை இயக்குனர்களான தேவராஜ் மோகன் இயக்கியுள்ளனர். பாரதிராஜா மாதிரி கேமராவை கிராமத்தை நோக்கி நகர்த்தியவர்கள். சிவகுமார், சுஜாதா உள்பட பலர் நடித்துள்ளனர். 1979ல் வெளியானது.
பாடலின் சிறப்பு: இந்த காதல் மெலடி பாடலை எஸ்பிபி பாடியுள்ளார். இந்தப் பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இந்தப் பாடலுக்கு என்ன சிறப்புன்னா சுத்ததன்யாசி ராகத்தில் இளையராஜா பண்ணி இருப்பார். ஆனா இந்தப் பாட்டுல என்ன வித்தியாசம்னா ஒரே ஒரு இடத்துல அந்நிய ஸ்வரம் வருவது மாதிரி பண்ணிருப்பாரு. அதுவும் இந்தப் பாட்டுக்கு ரொம்ப அழகுதான். இந்தப் பாடல்ல புல்லாங்குழல் ரம்மியமாக இருக்கும். சந்தூரும் அவ்வளவு அழகா இருக்கும். வரிகள் ரொம்ப எளிமையா இருக்கும்.
வா பொன்மயிலே..: இந்தப் பாடலில் வா பொன்மயிலேன்னு முதலில் வரும். அதுல மயில் அகவல் எப்படி இருக்குமோ அதையும் தாண்டி தனது இசைக்கருவிகளில் அந்த இசையைக் கொண்டு வந்து இருப்பார் இளையராஜா. செலோ, ஸ்ட்ரிங்ஸ் என்ற அந்தக் கருவிகளை அவ்வளவு அழகாகப் பயன்படுத்தி இருப்பார். அதை உற்றுக்கவனித்தால் தெரியும்.
புதுமை: இதுக்குள்ள இன்னொரு வித்தியாசமும் இருக்கும். சரணம் முடிக்கிற இடத்தில் கொஞ்சம் கூட அதுக்கு ரெஸ்ட் கொடுக்காமல் தனனனனா தனனனா... என்று வரும்போது அந்த ராகத்தை மேலும் இழுத்துக் கொண்டு போய் பல்லவியில் முடித்திருப்பார். இப்படி இந்தப் பாடலை நாம் ரசிக்கிறோம் என்றால் வெறும் காட்சிக்காகவும், வரிக்காகவும் ரசிக்கவில்லை. இசைஞானி பண்ணிய புதுமைக்காகவும்தான் ரசிக்கிறோம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.