எம்ஜிஆரை வாத்தியாருன்னு சும்மாவா சொன்னாங்க... தயாரிப்பாளரை வியக்க வைத்த விஷயம்
எம்ஜிஆரை வாத்தியார் என்று எல்லாரும் அழைப்பது வழக்கம். அது எதற்காக என்று இப்போதுதான் புரிகிறது. வாங்க அதுக்கு ஒரு சின்ன சம்பவத்தை உதாரணமாகப் பார்ப்போம்.
ஏதாவது நல்ல பழக்கத்தை ஒருவர் கடைபிடித்தால் அவருடன் இருக்கும் நண்பர்களும் அதே போல கடைபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதே போல புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் இருந்தும் பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் ஒரு பழக்கத்தைக் கற்றுக்கொண்டார்.
அன்பே வா படப்பிடிப்பு நடந்த போது காலை 11 மணி அளவில் டிபன் சாப்பிடுவது வழக்கம். அப்போது டீயும், வடையும் கொடுப்பார்கள். அந்த வகையில் அதை நாங்க 'குரங்கு டிபன்'னு சொல்வோம். அன்றைய தினமும் அப்படித்தான் கொடுக்கப்பட்டது. அப்போது என் அருகில் இருந்த எம்ஜிஆர், சரவணன், நீங்க வடையை உங்க ரூம்ல வச்சி சாப்பிடுங்க என்றார்.
நான் என்னன்னு புரியாமல் விழித்தேன். 'என்ன சார் என்னாச்சு'ன்னு கேட்டேன். அதுக்கு எம்ஜிஆர் சொன்னதுதான் எல்லாருக்கும் பெரிய பாடம். அவர் சொன்னது இதுதான். ஒரு பொருளை எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும். இல்லன்னா அதைத் தனியா வச்சி சாப்பிடணும் என்றார்.
நானோ 'இல்லை சார், எல்லாருக்கும் கொடுத்தாச்சு'ன்னு சொன்னேன். அதுக்கு எம்ஜிஆர் மேலே கையைக் காட்டினார். அங்கு ஒரு லைட்மேன் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு நீங்க டீ, வடை கொடுக்கலன்னு சொன்னார். பசி என்று யாரும் தன்னைச் சுற்றி இருக்கக்கூடாது. உடனே அவரது பசியை ஆற்ற வேண்டும் என்பதையே எம்ஜிஆர் தன் பழக்கமாகவும், அதை ஒரு கடமையாகவும் வைத்திருந்தார்.
எல்லாருக்கும் கொடுத்தாச்சான்னு பார்த்துட்டு சாப்பிடணும்னு எம்ஜிஆர் சொன்னது என் மனதுக்குள்; இன்று வரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. நான் அதன்பிறகு வெளியே எங்கு சென்றாலும் என் டிரைவரிடம் கூட சாப்பிட்டாச்சான்னு தான் கேட்பேன். அதுக்கு பிறகு தான் காரை எடுக்கச் சொல்வேன். எம்ஜிஆரிடம் இருந்து தான் அந்தப் பழக்கம் எனக்கு வந்தது என்றார் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன்.