Cinema News
பொங்கலுக்கு வெளியாகும் 4 திரைப்படங்கள்!. எந்த படம் ஹிட் அடிக்கும்?..
Pongal Release: பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில், பட்டாசு, இனிப்பு, பொங்கல், கரும்பு, விளையாட்டு நிகழ்ச்சிகளை தாண்டி புது திரைப்படங்கள் வெளியாகும். அதுவும், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும்.
ஆனால், இப்போதெல்லாம் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 2025ம் வருட பொங்கலுக்கு ரஜினி, கமல், விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகவில்லை. ஆனால், அஜித்தின் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஏற்கனவே அஜித் நடித்த விடாமுயற்சி படம் இன்னமும் முடியாத நிலையில் அதற்கு பின்பு துவங்கிய குட் பேட் அக்லி படம் வேகமாக முடிந்து பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மார்க் ஆண்டனி போல குட் பேட் அக்லி படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அமைத்துள்ளார்.
அடுத்து, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதில், ராம்சரண் ஹீரோவாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
அடுத்து பாலாவின் வணங்கான் படமும் பொங்கல் ரேஸில் இணைந்திருக்கிறது. முதலில். சூர்யாவை வைத்து இப்படம் துவங்கப்பட்டது. ஆனால், ஏதோ பிடிக்காமல் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட அருண்விஜய் உள்ளே வந்தார். இந்த படத்தில் அவர் காது கேட்காத, வாய் பேச முடியாத வேடத்தில் நடித்திருக்கிறார். எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்து சியான் விக்ரமின் வீர தீர சூரன் படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மதுரையை கதைக்களமாக கொண்டு ஒரு பக்கா ஆக்சன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்திலும் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பொதுவாக 4 படங்கள் ஒன்றாக வெளியானால் ஒன்று அல்லது இரண்டு பெரிய படங்கள் இருக்கும். ஆனால், இந்தமுறை 4 படங்களுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் கண்டிப்பாக 2025ம் வருட பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிங்க: சிவராஜ்குமாருக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ ஜெயிலர் 2 நிலைமை?