சுதந்திரம் எனது உயிர் மூச்சு...இந்த மண்ணில் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன்...அடித்துச் சொன்ன தமிழ்ப்படங்கள்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கினார் திலகர். வெள்ளையனே வெளியேறு என்றார் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்றார் வாஞ்சிநாதன். வெள்ளையனுக்கு எதிராக கப்பம் கட்ட மாட்டேன் என்று துணிவுடன் எதிர்த்து நின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
சுதேசி கப்பலை விட்டு வெள்யைனுக்கு எதிராக பிரசாரம் செய்தார் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். தனது வீராவேசமான கவிகளால் இந்திய மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கி சுதந்திர வேட்கையைத் தூண்டினார் மகாகவி பாரதியார். இவர்கள் எல்லாருடைய பெயரிலும் தமிழ்சினிமாவில் படங்கள் வந்துவிட்டன. சுதந்திரத்தைத் தாகமாகக் கொண்ட படங்கள் ஏராளமாக வந்த போதிலும் ஒருசில தான் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகின்றன.
ஆக.15ல் பிறந்த நம் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் படங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலானவை சுதந்திர வேட்கையைத் தூண்டுபவையாகத் தான் உள்ளன.
சுதந்திரம், ஜெய்ஹிந்த், செங்கோட்டை போன்ற படங்களைச் சொல்லலாம். நாம் ஒரு குறிப்பிட்ட நடிகரைச் சாராமல் பொதுவாக பரவலான ரசிகர்களும் பார்த்து ரசித்த சில தமிழ்ப்படங்களை இங்கு பார்ப்போம்.
காந்தி
1982ல் வெளியான படம். ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியுள்ளார். பென் கிங்ஸ்லி, ரோஹினி கடன்ஹடி, கண்டிஸ் பெர்கன், ரோஷன் சேத் உள்பட பலர் நடித்துள்ளனர்.
8 ஆஸ்கர் விருதுகளைக் கைப்பற்றியுள்ளது. படத்தில் பென் கிங்ஸ்லி மகாத்மா காந்தியாக வந்து அசத்தியுள்ளார். ரோஷன் சேத் நேருவாக வந்து நடித்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாம் பிறந்த மண்
1977ல் அ.வின்சென்ட் இயக்கத்தில் வெளியான படம். சிவாஜி, ஜெமினிகணேசன். கமல், கே.ஆர்.விஜயா, படாபட் ஜெயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ஆசை போவது மண்ணிலே, தாய்பாடும் பாட்டு தானே, இதய தலைவா, அன்னை பகவதிக்கு, பாரதத்தில் ஒரு போர் ஆகிய பாடல்கள் உள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மன்
1959ல் வெளியான படம். பி.ஆர்.பந்துலு இயக்கியுள்ளார். சிவாஜி, பத்மினி, ஜெமினி கணேசன், வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் தான் மிகவும் பிரபலமான வசனம் கிஸ்தி, திரை, வரி, வட்டி....மானங்கெட்டவனே உனக்கேன் கட்ட வேண்டும் கப்பம்? என்ற கட்டபொம்மனின் வீர வசனத்தை சிவாஜிகணேசன் பேசி அசத்துவார்.
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை இந்த வசனமும் காலத்தால் அழியாது. விறுவிறுப்பான திரைக்கதை, ஜி.ராமநாதனின் இசை மனதை வருடும் பாடல்கள் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
கப்பலோட்டிய தமிழன்
வெள்ளிப்பனி மலையின் மீது உலாவுவோம், சிந்து நிதியின் இசை நிலவினிலே ஆகிய பாடல்கள் தான் இந்தப்படத்தைச் சொன்னதுமே நம் நினைவுக்கு வரும்.
படத்தில் எஸ்.வி.சுப்பையா கண்களை உருட்டி பேசி நடிக்கும் நடிப்பும், கப்பலோட்டிய தமிழனாக வ.உ.சி.யாக வந்து செக்கிழுத்த செம்மலாக சிவாஜிகணேசன்நடிக்கும் காட்சியும் நமக்கு சுதந்திரத் தாகத்தை உண்டு பண்ணும். நாமும் அந்தக்காலத்தில் பிறந்து வெள்ளையருக்கு எதிராகப் போராடியிருக்கலாமே என்ற ஒரு வீர உணர்வு வரும்.
செங்கோட்டை
1996ல் வெளியான படம். சி.வி.சசிகுமார் இயக்கத்தில் அர்ஜூன், ரம்பா, மீனா, விஜயகுமார், வடிவேலு, ஆனந்தராஜ், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்தியாசாகரின் இசை படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது வழக்கமான நாட்டுப்பற்றை இந்தப்படத்திலும் ஊட்டியுள்ளார்.