அடுத்த 5 மாதத்தில் இத்தனை படங்கள் வெயிட்டிங்கா?.. ரொம்பவே எதிர்பார்க்கப்படும் டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ!

by Saranya M |
அடுத்த 5 மாதத்தில் இத்தனை படங்கள் வெயிட்டிங்கா?.. ரொம்பவே எதிர்பார்க்கப்படும் டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ!
X

இந்த ஆண்டு முதல் 6 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், இதுவரை வெளியான பெரிய படங்கள் லிஸ்ட் எடுத்தால் அஜித் குமாரின் துணிவு, விஜய்யின் வாரிசு, தனுஷின் வாத்தி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், வடிவேலுவின் மாமன்னன் மற்றும் இந்த வாரம் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இதில், பல படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், வசூல் ரீதியாக நல்லதொரு வெற்றியை பெற்று இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் இந்த ஆண்டு விமர்சன ரீதியாக ஹிட் அடித்த படங்கள் என்றால் கவினின் டாடா, அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தொழில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய் நடித்த தீராக் காதல், மணிகண்டனின் குட் நைட் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக ஹிட் அடித்துள்ளன.

இதில், போர்த் தொழில் திரைப்படம் விதிவிலக்காக வசூலிலும் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த 5 மாதங்கள் வெளியாக உள்ள டாப் 5 படங்கள் இங்கே காணலாம்.

5வது இடத்தில் அயலான்: இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்து ஏலியன் கான்செப்ட்டில் உருவான அயலான் திரைப்படம் கடந்த பல வருடங்களாக கிடப்பில் கிடந்த நிலையில், ஒரு வழியாக இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை அதிகம் இந்த படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான டைம் மெஷின் படமான இன்று நேற்று நாளை நன்றாக ஓடிய நிலையில், சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு மாவீரன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது கூடுதல் சிறப்பு.

4வது இடத்தில் ஜவான்: பெயருக்குத்தான் பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் நடித்துள்ளார் என்றாலும் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி உள்ளார். மேலும், தமிழ் சினிமா நடிகர்களான நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, அம்ரிதா அய்யர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தில் இதுவரை பார்க்காத அளவுக்கு ஷாருக்கானுக்கு மொட்டை போட்டெல்லாம் அட்லீ இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஏகப்பட்ட படங்களின் காப்பி என வழக்கம் போல கழுவி ஊற்றப்பட்டாலும், பதான் போலவே இந்த ஆண்டு இந்த படம் 1000 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3வது இடத்தில் ஜெயிலர்: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் படம் இடம்பிடித்துள்ளது.

அனிருத் இசையில் வெளியான காவாலா பாட்டே இந்த படத்தின் ஹைப்பை எகிற வைத்துள்ள நிலையில், ஜெயிலர் மூலம் நெல்சன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்பார், அண்ணாத்த படங்கள் சொதப்பிய நிலையில், ஜெயிலர் ரஜினிகாந்துக்கும் கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2வது இடத்தில் லியோ: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், அனுராக் காஷ்யப், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கும் படமாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணமே கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்த மாபெரும் வசூல் வேட்டை தான். மாஸ்டர் படத்தில் மிஸ்ஸான பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை இந்த படத்தின் மூலம் மீண்டும் விஜய் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் 500 கோடியாவது இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் லியோ படம் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இந்தியன் 2: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை இயக்குநர் ஷங்கர் தீவிரப்படுத்தி உள்ளார்.

இந்தியன் படத்தின் மிகப்பெரிய வெற்றி மற்றும் விக்ரம் படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் மாஸ் காட்டிய கமல் என பயங்கர ஹைப் உள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி பட்ஜெட் படமாக மாறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

Next Story