எங்ககிட்ட இல்லாத பணமா? மத்தவங்களுக்கு ஏன் உதவி பண்ணனும்? காரசாரமா பேசிய கங்கை அமரன்

by Rohini |   ( Updated:2025-04-20 23:35:01  )
gangai
X

gangai

Kangai Amaran: இளையராஜா காப்பி ரைட்ஸ் குறித்து ஒரு பட விழாவில் கலந்து கொள்ள வந்த கங்கை அமரனிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு காரசாரமாக பேசினார் கங்கை அமரன். சமீபகாலமாக தன்னுடைய பாடலை தன் அனுமதியின்றி படங்களில் யாரும் பயன்படுத்தக் கூடாது என இளையராஜா கூறி வருகிறார்.மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடலை அவர் அனுமதியின்றி பயன்படுத்தியதனால் அந்த பட நிறுவனம் மீது புகார் தெரிவித்திருந்தார் இளையராஜா. ஆனால் அவர் இசையின் ரைட்ஸை எந்த ஆடியோ நிறுவனம் வைத்திருக்கிறதோ அவர்களிடம் என்.ஒ.சி பெற்றுவிட்டனர். இருந்தாலும் தன் பாடல் எனும் போது என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று இளையராஜா கூறியதால் அவருக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து அந்த பிரச்சனையை சரி செய்தனர் மஞ்சுமெல் பாய்ஸ் பட நிறுவனம்.

அதே போல் தான் இப்போது குட் பேட் அக்லி படத்திலும் நடந்து வருகிறது. இளையராஜாவின் மூன்று பாடல்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் சம்பந்தப்பட்ட ஆடியோ கம்பெனியில் என்.ஒ.சி பெற்று விட்டனர். இளையராஜாவிடம் அனுமதி வாங்கவில்லை. இதுதான் இளையராஜாவிற்கு இருக்கும் கோபம். அவருக்கு பணத்தின் மீது இவ்வளவு பேராசையா? அவருடைய பாடல்களை பயன்படுத்துவது அவருக்குத்தானே பெருமை என்றெல்லாம் இளையராஜா மீது கடுமையான விமர்சனம் வந்து கொண்டு இருக்கின்றன.

இதற்கிடையில் இதை பற்றி கங்கை அமரன் கூறும் போது அவரிடம் இல்லாத பணமா? கொட்டிக் கிடக்குது. செலவழிக்க முடியாமல் தவித்து வருகிறோம். இப்படி இருக்கும் போது பணத்துக்காகத்தான் இந்த காப்பிரைட்ஸ் பிரச்சினையை அண்ணன் கொண்டு வருகிறார் என்று கூறுவதெல்லாம் நியாயம் இல்லை. சொந்தமா பாட்டு போடுங்க. அப்படியே போட்டாலும் அந்த பாட்டு ஜெயிக்கலயே.

நாங்க போட்ட பாட்ட பார்த்துதானே மக்கள் ரசிக்கிறார்கள். கைத்தட்டுகிறார்கள். அப்போது அதில் எங்களுக்கு பங்கு இருக்கிறது. அதைத்தான் அண்ணன் கேட்கிறார். அவரிடம் முன்னாடியே அனுமதி வாங்கியிருந்தால் கண்டிப்பாக மறுக்க மாட்டார். இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார் என கங்கை அமரன் கூறினார். உடனே பத்திரிக்கையாளர்கள் ‘அவ்வளவு காசு இருந்தால் ஏன் மத்தவங்களுக்கு கொடுத்து உதவலாமே’ என்று கேட்டனர்.

அதற்கு ‘ நாங்க ஏன் மத்தவங்களுக்கு கொடுக்கணும்? நாங்க உழைச்சு சம்பாதிச்சது. எங்களுக்கு பின்னாடி எங்கள் சந்ததியினர் பயன்படுத்துவார்கள். நீங்களும் அதே மாதிரி உழைச்சு சம்பாதிங்க. ஒரு பெரிய மடத்தை கட்டி திருமணங்களுக்கு வாடகை விடலாம். அது எதுக்கு? அதுவும் ஒரு பிசினஸ் தான். நாங்களும் சில உதவிகள் செய்துதான் வருகிறோம். ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்வதில்லை’ என்று கங்கை அமரன் தெரிவித்தார்.

Next Story