MGR: தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர், தன்னிகரற்ற கலைஞர் என்று அறியப்படுபவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். சின்னவர், பொன்மனச்செம்மல் என பல பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார். சினிமாவில் யாரும் அடைய முடியாத இடத்தை தொட்டாலும் அரசியலிலும் மாபெரும் சிகரம் தொட்டார். இன்றுவரை எம்ஜிஆருக்கு ஈடு இணை யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவருடைய படங்களை எடுத்துக் கொண்டால் இளைஞர்களுக்கு கருத்து சொல்லும் படமாகத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தன் படங்களில் புகை, மது என எதையும் காட்ட விரும்பமாட்டார் எம்ஜிஆர். அவரும் அந்த மாதிரியான கேரக்டர்களில் இதுவரை நடித்ததில்லை. இன்னொரு விஷயம் என்னவெனில் அம்மா மீது மிகுந்த மரியாதையுடனும் மதிப்புடனும் இருக்கக் கூடியவர்.
அதையும் தன் படங்களில் காட்டுவார். பெரும்பாலும் அம்மா செண்டிமெண்ட்டாகவே தான் இவருடைய படங்கள் இருக்கும். பாடல்களை பொறுத்தவரைக்கும் இவர் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு பாடலும் வெளியாகாது. பாடலில் உள்ள அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு அதில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகே அந்த பாடல்கள் வெளியாகும்.
இந்த நிலையில் எம்ஜிஆரை பற்றி கங்கை அமரன் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். பழைய பேட்டியில் அவர் பேசியது இப்போது வைரலாகி வருகின்றது. அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவிற்கு எம்ஜிஆர் தலைமை ஏற்று நடத்தினாராம். அந்த விழாவை கங்கை அமரன் தான் தொகுத்து வழங்கினாராம். அதுமட்டுமில்லாமல் பாவலர் கிரியேஷன்ஸ்தான் அந்தப் படத்தை தயாரித்தார்கள்.
கங்கை அமரனை பொறுத்தவரைக்கும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் என பன்முக கலைஞராக இருப்பவர். அந்த விழாவில் எம்ஜிஆர் கங்கை அமரனை உலக மகா கவிஞன் என கிண்டலடித்தாராம். அதற்கு காரணம் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அமைந்த வாடி ஏன் கப்பக்கிழங்கே பாடலை எழுதியது கங்கை அமரன். கப்பக்கிழங்க வச்சு பாடலை எழுதிய ஒரே கவிஞன் கங்கை அமரன் தான் என கிண்டலடித்தாராம் எம்ஜிஆர்.

அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக அதே மேடையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதா புதுமுகம். கேரளா வரவு. கேரளாவில் கப்பக்கிழங்கு பிரபலம். அதை வைத்துதான் அப்படி எழுதினேன் என கூறினாராம் கங்கை அமரன். அதற்கு எம்ஜிஆர் அப்படியா சரி சரி என்று சிரித்தாராம்.