கிடப்பில் போடப்பட்ட கௌதம் மேனன் படம்… மீட்டெடுக்க முன் வருவாரா பிரபல தயாரிப்பாளர்??
தமிழின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன், கடந்த 2016 ஆம் ஆண்டு “துருவ நட்சத்திரம்” என்ற திரைப்படத்தை இயக்க தொடங்கினார். இதில் விக்ரம், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வந்தனர்.
இத்திரைப்படத்தின் 75 % படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக இத்திரைப்படம் அப்படியே முடங்கியது. எனினும் இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகியும் இத்திரைப்படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மூலம் இத்திரைப்படத்தை வெளியிட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. எனினும் இத்திரைப்படம் வெளியாக மிகவும் தாமதமானது.
பொருளாதார சிக்கல் காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. முதலில் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் 2018 ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போனது. ஆனால் இத்திரைப்படம் அப்போதும் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கௌதம் மேனனிடம் சில ஒப்பந்தங்கள் போட்டு இத்திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார். இந்த நிலையில்தான் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தையும் ஐசரி கணேஷ் மூலம் வெளியிட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதலால் கூடிய விரைவில் “துருவ நட்சத்திரம்” திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கௌதம் மேனம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.