சிவாஜிக்கு தரமான செய்கையை செய்த ஜெமினி கணேசன்.. அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா??
நடிகர் ஜெமினி கணேசன் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மருத்துவம் படிக்க நினைத்தவரின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. அதாவது ஜெமினி கணேசனுக்கு இருபது வயது இருந்தபோது அலமேலு என்ற பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
அலமேலுவின் தந்தை ஜெமினி கணேசனை மருத்துவம் படிக்க வைப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் மனைவியின் வீட்டில் நடந்த தொடர் மரணங்களால் (அலமேலுவின் அக்காளும் அவரது கணவரும் அடுத்தடுத்து இறந்ததாக கூறப்படுகிறது) ஜெமினி கணேசனின் மருத்துவ கனவு சிதைந்தது. இதனிடையே ஜெமினி கணேசனுக்கும் அலமேலுவுக்கும் ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.
ஏற்கனவே படித்த ஒரு கல்லூரியில் ஜெமினி கணேசன் விரிவுரையாளராக பணிக்கு சென்றார். அதன் பின் தான் அவர் நடிப்பில் ஆர்வம் கொண்டார். அந்த நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் ஹீரோவுக்கான ஆடிஷனுக்கு சென்றிருந்தார் ஜெமினி. ஆனால் பல காரணங்களால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பறிபோயின. எனினும் ஜெமினி ஸ்டூடியோவில் சினிமாவில் புதிதாக நடிக்க வருபவர்களை ஆடிஷன் எடுத்து ஸ்டூடியோ நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் நல்ல வேலை கிடைத்தது. இதன் பிறகு தான் இவர் “ஜெமினி” கணேசன் என அழைக்கப்பட்டார்.
ஜெமினி கணேசன் இந்த உத்யோகத்தில் இருக்கும்போது தான் வி சி கணேசன் என்ற நாடக நடிகர் ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்கு கேட்டு வந்திருக்கிறார். அப்போது அவரை ஆடிஷன் எடுத்த ஜெமினி கணேசன் “வி சி கணேசனின் வசன உச்சரிப்பு அருமையாக இருக்கிறது. இவருக்கு வாய்ப்பளித்தால் மிகச் சிறந்த நடிகராக வலம் வருவார்” என ஸ்டூடியோ நிர்வாகத்திற்கு எழுதி அனுப்பினாராம்.
அதன் பிறகு தான் நடிப்பு புயலாக, நடிகர் திலகமாக, வி சி கணேசன் என்ற நாடக நடிகர் சிவாஜி கணேசனாக உருவானார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.