குதிரையின் பெயரை ஸ்டூடியோவுக்கு வைத்த ஜெமினி நிறுவனத்தார்?? ஆனால் விஷயமே வேற!!
தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட பல கிளாசிக் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஜெமினி ஸ்டூடியோஸ். தொடக்கத்தில் மோசன் பிக்சர்ஸ் என்ற பெயரில் இருந்த நிறுவனத்தை கே.சுப்ரமணியத்திடம் இருந்து எஸ்.எஸ்.வாசன் ரூ.86,000 கொடுத்து விலைக்கு வாங்கினார்.
இதன் பிறகுதான் இந்த ஸ்டூடியோவிற்கு ஜெமினி ஸ்டூடியோ என்று பெயர் வைத்தார் எஸ்.எஸ்.வாசன். ஆனால் அவர் ஜெமினி என்று ஏன் பெயர் வைத்தார்? இந்த கேள்விக்கான பதிலாக ஒரு பிரபலமான கதை பரவி வந்தது.
அதாவது அந்த காலத்தில் எஸ்.எஸ்.வாசன் குதிரை பந்தயத்தில் கலந்துக்கொள்வாராம். அப்போது ஜெமினி என்ற குதிரை மேல் எஸ்.எஸ்.வாசன் பந்தயம் கட்டுவாராம். அந்த குதிரையால் கைநிறைய பணம் சம்பாத்தித்தாராம். அந்த குதிரை ராசியான குதிரை என்பதால்தான் அந்த குதிரையின் பெயரையே எஸ்.எஸ்.வாசன் ஸ்டூடியோவிற்கு வைத்துவிட்டார் என பலரும் கூறிவந்தனர்.
ஆனால் அதன் உண்மைத் தன்மை குறித்து சமீபத்தில் ஒரு வீடியோவில் இயக்குனரும் நடிகருமான மனோ பாலா பகிர்ந்துள்ளார். அதாவது எஸ்.எஸ்.வாசனின் மனைவியின் பெயர் பட்டம்மாள். பட்டம்மாளின் ராசி மிதுன ராசி. மிதுன ராசிக்கு ஆங்கிலப் பெயர் ஜெமினி என்பதால்தான் ஸ்டூடியோவிற்கு ஜெமினி என எஸ்.எஸ்.வாசன் பெயர் வைத்தாராம். இது தான் உண்மை தகவல் என மனோபாலா கூறியுள்ளார்.
தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஜெமினி ஸ்டூடியோஸ், பிற்காலத்தில் இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் “தி பார்க்” என்ற சொகுசு ஹோட்டல் இயங்கி வருகிறது.