முடியாது என்ற கதாபாத்திரத்தை உயிரைப் பணயம் வைத்து துணிச்சலாக செய்து காட்டிய ஜெமினிகணேசன்
ஜெமினிகணேசனை நமக்கு காதல் மன்னனாகத் தான் தெரியும். அவர் டூப் நடிகர்களே செய்யத் தயங்கிய ஒரு ஆக்ஷன் காட்சியில் நிஜ ஹீரோவாக அவரே செய்துகாட்டியும் நடித்துள்ளார். அது தான் கணவனே கண்கண்ட தெய்வம் படம்.
இந்த காட்சி எப்படி உருவானது? அதில் யாருமே செய்ய முடியாத சவாலான கதாபாத்திரத்தை எப்படி வெற்றிகரமாக செய்து முடித்தார் என்பதை அவரே சொல்கிறார்...பாருங்கள்.
கணவனே கண்கண்ட தெய்வம் படம் வந்தது. பட்டண்ணா தயாரித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த வேஷத்தை எனக்குக் கொடுக்க நாராயணன் கம்பெனி அதிபர் நாராயண அய்யங்காருக்கு விருப்பமில்லை. பலதரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட கேரக்டர். இது கணேசனால் நடிக்க முடியாது என்று அவர் சொல்லிவிட்டார்.
எனக்கு ஒரே வருத்தம். என் மனநிலையோ இந்த கேரக்டரை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது. இதுபோன்ற கேரக்டர் இனி வாழ்நாளிலேயே வராது. அதனால் இந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி நடித்துவிட வேண்டும் என்று எண்ணினேன். அந்தப்படத்தில் அழகிய வாலிபனாகவும், வாய் கோணி முகம் சிறுத்து கூன் விழுந்த குரூபியாகவும் என இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்பு இருந்தது.
நான் ஒரு நாள் பாலன் என்ற உதவி இயக்குனர் மூலம் பழங்காலத்து ஆங்கிலோ இந்திய பிச்சைக்காரனைப் போல தாடி மீசை வைத்து நாராயண அய்யங்காரின் வீட்டுக்குச் சென்று அய்யா பிச்சை போடுங்கய்யா என்றேன். அவர் அப்போதுதான் பூஜையை முடித்துக் கொண்டு வந்தார்.
அவரைப் பார்த்து மெல்லக் கூனி குறுகி, ஐயா பிச்சை போடுங்கய்யா...என்று கேட்டேன். என் வேஷத்தைக் கண்டதும் அருவறுப்பு...போ..போ..! என்று விரட்டினார். நான் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவரை நோக்கி நடந்தேன். யாரது யாரது என விடாமல் விரட்டினார். இந்த சத்தம் கேட்டு பட்டண்ணா வந்துவிட்டார்.
யாரது முரட்டுப் பிச்சைக்காரனா இருக்கான். விரட்டினா கூடப் போக மாட்டேங்குறானே என பட்டாண்ணாவின் பக்கம் திரும்பினார். அப்போது பட்டண்ணாவுக்கு நான் கண்ஜாடை காட்டினேன்.
அவர் தடுக்கவில்லை. படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்துவிட்டேன். என்னடா நீ கூடப் பார்த்திட்டு நிக்கறே...என்று பட்டண்ணாவை கடிந்தார் அய்யங்கார். நம்ம கணேசன் தான் அது. நன்றாகப் பாருங்க என்றார். பட்டண்ணா, நம்ம கணேசன் தான் அது என்றார். அட...நீயா...அடையாளமே தெரியலயப்பா...உனக்கு எதுக்கு இந்தப் பிச்சைக்கார வேஷம்...என நாராயண அய்யங்கார் கேட்டார்.
கணவனே கண்கண்ட தெய்வத்தில் உள்ள பிச்சைக்கார வேஷம் தான் அது..இந்த வேஷம் தான் வேண்டும் என்றார். உடனே மெய்சிலிர்த்த அய்யங்கார், உனக்கே தான் அந்த வேஷம். உனது ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் என்று சொல்லி என்னையே நடிக்க வைத்தார். பிச்சை எடுத்துப் பெற்ற பாத்திரம் அது.
கணவனே கண்கண்ட தெய்வம் படத்திற்காக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து ஹரிபாபுவின் வீட்டிற்குப் போய்விடுவேன். அங்கு அடிப்படை மேக் அப் நடக்கும். ஐந்தரை மணிக்கு ஹரிபாபு வருவார். கூனன் மேக் அப் போடுவார். இது முடித்து ஸ்டூடியோ போக ஏழு மணி ஆகிவிடும்.
அப்போதெல்லாம் காலை 7 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும். இப்படி போட்ட மேக் அப்பிலேயே இரவு 9 மணி வரை இருப்பேன். தொடர்ந்து பல நாள்கள் இருந்துள்ளேன். ஒரு சமயம் தொடர்ந்து 3 நாள்கள் மேக்அப்பிலேயே இருந்தேன். ஆமாம். நாற்காலியிலேயே தான் தூங்குவேன்.
ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்துள்ளேன். கயிற்றைப் பிடித்தபடி அரண்மனை உப்பரிகையில் உள்ள இளவரசியின் அறைக்கு நான் தாவி வருவது போன்ற காட்சி. இதற்காக நரசு ஸ்டூடியோவில் ஒரு பெரிய ஆலமரத்தின் உயரத்திற்கு ஒரு செட்டைப் போட்டார்கள். இது சுமார் 50 அடி உயரம். மரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டார்கள். இதைப் பிடித்து தொங்கியபடி நான் எம்பிக் குதிக்க வேண்டும்.
என் சண்டைப்பயிற்சியாளர் பலராமன் 3 சண்டைக்கலைஞர்களைத் தயார் செய்தார். ஆனால் அவரால் கூட இப்படி குதிக்க முடியவில்லை. மரத்தின் மேல் ஏறினார்கள். அவ்வளவு தான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. உடனே நான் எழுந்து நானே செய்கிறேன் என்று சொல்லி குதித்துவிட்டேன். பட்டண்ணா வந்தார்.
படத்தில் நீ ஹீரோ இல்ல...வாழ்க்கையிலும் நீ ஒரு உண்மையான ஹீரோதான் என்றார். இந்த ஆண்டின் சிறந்த நடிகர் என பட்டம் எனக்குக் கிடைத்தது. இதுதான் என் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.