மேடைகளை எதிர்பார்க்காதீங்க...மேடைகளை உருவாக்குங்கள்...அன்று அவர் சொன்னது இன்று நடக்கிறது...!!!

kamal and Gnanasambanthan
கமலின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளரும், நடிகரும், மேடைப்பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன் கலைஞானி கமலைப் பற்றி இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
60 ஆண்டுகாலமாக திரையுலகில் இருந்து வந்து கொண்டு இருக்கின்ற கலைஞானி. அவர் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது எனது பெரிய மகிழ்வு. 1982ல் தியாகராஜர் கல்லூரியில் படித்த போது மூன்றாம் பிறை படம் வெளியானது. அதை சிந்தாமணி தியேட்டரில் பார்த்து விட்டு வெளியே வரும்போது எப்பேர்ப்பட்ட அருமையான நடிப்பு?

Moondram pirai sridevi, kamal
இப்பேர்ப்பட்ட நடிகர் வாழ்கிற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று அன்று தான் நினைத்தேன். அதையே இன்றும் சொல்கிறேன். அப்போது நான் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன். அவரோடு எனக்கு தொடர்பு ஏற்படும் என்று. அந்த நட்பு ரீதியான தொடர்பு விருமாண்டியிலே கிடைத்தது. மேடையிலே பேசுகிறபோது என்னை அழைத்து அவர் எழுதிய திரைக்கதையிலே துணை நிற்கச் செய்தார். நடிக்கவும் என்னை வைத்தார்.
மோதிரக்கையால் குட்டுப்பட்டதாலோ என்னவோ இன்று வரை 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். இப்போது நடித்துக் கொண்டும் இருக்கிறேன். நான் தவழ்கிற போதெல்லாம் எனக்கு ஆறுதல் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஊக்கமான வார்த்தைகளை சொல்வதும் அவர் தான். எங்கள் வீட்டுக்கு மூத்தவர் என்கிற அளவுக்கு அவரை நான் மதிப்பேன். அதுமட்டுமல்ல. எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் தான் சொல்லுவார். 2018ல் அவருடன் உரையாடிக்கொண்டு இருந்த போது இனிமேலும் மேடைகளை எதிர்பார்த்துக்கிட்டு இருக்காதீங்க.
நீங்க மேடைகளை உருவாக்குங்க. அப்போ தான் நல்லது என்றார். எப்படின்னு கேட்டேன். ஒரு யு டியுப் சேனல ஆரம்பிங்க. கொரோனா வருவதற்கு முன்பு சொன்னார். அவர் சொன்னதை நான் வேதவாக்காக எடுத்துக்கொண்டு மாடியில் என்னால முடிந்த ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கினேன். இன்னைக்கு சில்வர் பட்டன பெற்று அதற்கும் மேலாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் சப்ஸ்கிரைபர் இருக்காருன்னா பல லட்சம் பேர் இதெல்லாம் பார்க்குறாங்கன்னா இதுக்கெல்லாம் காரணம் கமல் அவர்கள் தான்.

kamal and K.Gnanasampanthan
இப்போ திரைத்துறையைச் சேர்ந்த யாராவது வீட்டுக்கு வந்தா அவங்களை அழைச்சிட்டுப் போயி மேல காட்டுனா எல்லாருமே வியந்து பார்க்குறாங்க. எப்படி உங்களுக்கு இந்த யோசனை வந்ததுன்னு கேட்குறாங்க. நான் உடனே கமல் அவர்களுடைய படத்தைக் காமிச்சி அவர் தான்னு சொல்வேன். நான் எடுத்த வீடியோக்களை எல்லாம் அவருக்குப் போட்டு காட்டறப்ப அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைவார்.
அவரும் வளர்ந்து கொண்டு இருக்கிறார். தன்னைச் சார்ந்தவர்களும் வளர வேண்டும் என்று நினைக்கிற தன்மை உடையவர். பிக்பாஸ் 5 வரப்போகிறது. என்னென்னமோ சொன்னாங்க. அவரு வரப்போறாரு. இவரு வரப்போறாருன்னு. அசைக்க முடியல. கமல் அவர்களுடைய இடம் கமலுக்குத்தான். அதோடு மட்டுமல்ல. இவ்ளோ பெரிய மீடியாவுல அவர் செய்கின்ற அபூர்வமான செயல் என்னவென்றால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் வளர்ச்சித்துறை செய்கின்ற பணியை ஒரு மனிதராக செய்கின்றார்.

K.Gnanasambanthan
எப்படி? நூல் அறிமுகம் செய்கின்றார். நூல் அறிமுகத்தை அவர் சொல்கிறபோது 8 கோடி பேருக்குப் போய்ச் சேருகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஒவ்வொரு ஞாயிறும் அவர் புத்தக அறிமுகம் செய்கிறபோது அவ்வளவு பெருமையாக இருக்கிறது. தனக்கு கிடைத்த இடத்தைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்கிறார்.
ஆண்டுதோறும் பிறந்தநாளன்று எப்போதும் லட்சக்கணக்கான நற்பணி மன்றத்தினர், தற்போது மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் ரத்ததானம் செய்வார்கள். விழி தானம், உடல் தானம் செய்வார்கள். இந்த ஆண்டில் அவர் பிறந்தநாளன்று அன்னதானம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளார்.