வாண்டட் ஆக வலையில் சிக்கிய வெங்கட் பிரபு... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சமூக வலைத்தளம் என்பது இருபக்கமும் கூர்மை கொண்ட கத்தி ஆகும். அங்கு நாம் செய்யும் செயல்கள் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள், அரசியல்வாதிகளையும் உற்று நோக்க செய்கின்றன.

வாரிசு, லியோ படங்களை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோட். இதில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, திரிஷா, பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், மைக் மோகன் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இது மட்டுமின்றி மறைந்த கேப்டன் நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக படத்தில் நடித்துள்ளார். இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதற்கான பிரீ புக்கிங் தற்போது தொடங்கி இருக்கிறது. ரசிகர்கள் போட்டிபோட்டு படத்திற்கு டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடும் என தெரிகிறது. இதையொட்டி தற்போது படக்குழு புரோமோஷன்களை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்தநிலையில் ரசிகர் ஒருவருடன் இயக்குநர் வெங்கட் பிரபு சண்டை போட்ட ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அந்த ட்வீட்டில், எஸ்ஏசி பையன், தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க, கல்பாத்தி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும் கோட் திரைப்படம் என ரசிகர் லீ என்பவர் ட்வீட் செய்திருந்தார்.

அதில் அவர் யாரையும் குறிப்பிடவில்லை. அதோடு எந்த ஒரு நபரையும் டேக் செய்யவில்லை. இதை வெங்கட் பிரபு அப்படியே கடந்து போயிருக்கலாம். ஆனால் அதற்கு பதில் சொல்கிறேன் என்று வெங்கட் பிரபு, "நன்றி ப்ரோ. உங்க அப்பா பெயர் சொல்லுங்க அவருக்கும் நன்றி சொல்லிடறேன்," என பதில் அளித்தார்.

இதற்கு அந்த ரசிகர்,"தேவை இல்ல ப்ரோ நான் நெபோடிசம் ப்ராடக்ட் இல்ல' என மீண்டும் பதிலடி கொடுக்க, தற்போது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இது தேவையில்லாத ஆணி என்று வெங்கட் பிரபுவை கலாய்த்து வருகின்றனர்.

அதோடு சில ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் மேலே சென்று வெங்கட் பிரபுவை மற்றும் விஜயை பர்சனலாக கலாய்க்க ஆரம்பித்து இருக்கின்றனர். குறிப்பாக அஜித் ரசிகர்கள் இந்த ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மீம்ஸ்கள் போட்டு ஆனந்தம் அடைந்து வருகின்றனர்.

இதனை பார்க்கும்போது வெங்கட் பிரபு வாண்டட் ஆக சென்று வலையில் சிக்கிக்கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

manju
manju  
Related Articles
Next Story
Share it