அப்பாவால் முடியாததை சாதித்து காட்டிய ஆதிக் ரவிச்சந்திரன்!.. இவருக்கு இப்படி ஒரு சோகக் கதையா!…

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகரோ, இயக்குனரோ அவர் வெற்றியை கொடுத்தால் மட்டுமே இங்கே கவனிக்கப்படுவார். அதுவும் அந்த வெற்றி மெகா வெற்றி என்றால் பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்கும், பல தயாரிப்பாளர்கள் அவருக்கு வலை விரிப்பார்கள், பல நடிகர்களும் அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த வெற்றியை பெறுவதற்கு முன் அவர் பட்ட கஷ்டங்களை பற்றி யாரும் பேசமாட்டார்கள்.
திரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படம் ஹிட் அடிக்கவே இவரின் இயக்கத்தில் சிம்பு நடிக்க முன்வந்தார். அப்படி உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ஓடவில்லை. அதற்கு முழு காரணமாக சிம்புவே இருந்தார். சரியாக ஷூட்டிங் வராமல் படத்தையே காலி செய்தார்.

அதன்பின் சினிமாவில் வாய்ப்பில்லாமல் ஹெச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கப்போனார் ஆதிக். அப்போதுதான் அவருக்கு அஜித் பழக்கமானார். அந்த படத்திற்கு பின் பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் ஓடவில்லை.
அதன்பின் விஷால், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஆதிக் சொல்லி அடித்த படம்தான் மார்க் ஆண்டனி. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, இப்போது குட் பேட் அக்லி சாத்தியமாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனை அஜித் ரசிகர்கள் இப்போது கொண்டாடி வருகிறார்கள். ஆனால், அவரின் குடும்பம் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் தெரியாது.

ஆதிக்கின் அப்பா ரவிச்சந்திரன் சினிமாவில் 25 வருடங்களாக உதவி இயக்குனராக வேலை செய்தவர். அவரால் ஒரு படம் இயக்க முடியவில்லை. ஆனால், மகனோ அஜித்தை வைத்து படமெடுத்துவிட்டார். ஆதிக் இயக்கும் படங்களின் சின்ன சின்ன வேடங்களில் ரவிச்சந்திரன் நடித்து வந்தார். ஷூட்டிங்கில் மகனுக்கு உதவியாளராகவும் வேலை செய்து வருகிறார்.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஆதிக் ‘எங்கள் குடும்பதை இருள் சூழ்ந்திருந்தது. வெளிச்சமாக ஒரு நல்ல வாய்ப்பு எப்போது வரும் என நாங்கள் காத்திருந்தோம். அஜித்தை வைத்து படமெடுக்கிறேன் என நான் சொன்னதும் என் அப்பா, அம்மா இருவருமே அழுதுவிட்டார்கள். அதுபற்றி மேலும் 2 கேள்விகளை நீங்கள் கேட்டால் நானே அழுதுவிடுவேன்’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.
குட் பேட் அக்லி ஹிட் என்பதால் மீண்டும் ஆதிக்கின் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். அடுத்து இல்லையென்றாலும் எப்படியும் ஆதிக்குக்கு அஜித் மீண்டும் ஒரு படம் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், மற்ற பெரிய நடிகர்களும் ஆதிக்கின் இயக்கத்தில் நடிக்க முன்வருவார்கள் என்றும் கணிக்கலாம்.