அஜித் படங்களில் அதிக வசூல்!. சம்பவம் செய்த ஆதிக் ரவிச்சந்திரன்!..

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளியான படம்தான் குட் பேட் அக்லி. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஜித்தை எப்படி பார்க்க வேண்டும் என ஒரு அஜித் ரசிகர் விரும்புவரோ அதை மனதில் வைத்து ஒரு தீவிர அஜித் ரசிகராகவே படத்தை இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதனால்தான் இந்த படம் அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. திரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லனாக நடித்திருந்தார். அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதோடு, ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
படம் முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் மாஸான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதோடு அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பில்லா, தீனா, மங்காத்தா உள்ளிட்ட சில படங்களின் ரெஃப்ரன்ஸும் படத்தில் ஆங்காங்கே வருகிறது. அதோடு, 90களில் ஹிட் அடித்த சில பாடல்களையும் சில காட்சிகளை வைத்திருக்கிறார் ஆதிக்.
நேற்று காலை 10 மணியளவில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. முதலில் இப்படம் பற்றி சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. படத்தில் கதை இல்லை. லாஜிக் இல்லை. ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க மாட்டார்கள்.. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்றெல்லாம் பலரும் சொன்னார்கள்.
ஆனால், மதியத்திற்கு பின் ‘படம் நன்றாகத்தான் இருக்கிறது. எல்லோரும் பார்க்கலாம், கதை, லாஜிக் எல்லாம் பார்க்காமல் தியேட்டருக்கு போய் என்ஜாய் பண்ணிட்டு வரலாம்’ என்கிற கருத்து பலராலும் சொல்லப்பட்டது. முதல் நாளில் இப்படம் உலக அளவில் 50 கோடி வரை வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. இந்திய அளவில் 28.50 கோடி வசூல் என சிலர் சொன்னர்கள்.

இந்நிலையில், படத்தின் உண்மையான வசூலை ஆதிக் ரவிச்சந்திரனே தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் தமிழகத்தில் மட்டும் குட் பேட் அக்லி முதல் நாளில் 30.9 கோடி வசூலை பெற்றிருப்பதாகவும், அஜித் படங்களில் இதுதான் முதல் நாள் வசூலில் அதிகம் எனவும் அவர் பதிவு செய்திருக்கிறார்.