Good bad ugly review: அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த குட் பேட் அக்லி படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது. சில வெளிநாடுகளில் காலை 3.30 மற்றும் 4 மணியளவில் படம் திரையிடப்பட்டது. எனவே, அப்படி படம் பார்த்தவர்கள் யுடியூப்பிலும், எக்ஸ் தளத்திலும் படம் பற்றிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பல பேர் பல விஷயங்களை சொன்னாலும் அடிப்படையாக எல்லோரும் சொல்வது ‘அஜித் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட். ஆனால், எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம்தான்’ என்கிறர்கள்.
சரி படத்தின் பிளஸ் மற்றும் மைன்ஸ்கள் ஆகியவற்றை பார்ப்போம். படம் முழுக்க முழுக்க அஜித். அஜித் என்றே யோசித்திருக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு அஜித் ரசிகர் என்பதால் ஒரு பேன் பாய் மொமண்ட் மூடில் முழு படத்தையும் எடுத்திருக்கிறார். படம் முழுக்க அஜித்துக்கான பில்டப் காட்சிகள் இருப்பது அவரின் ரசிகர்களுக்கு விருந்துதான். அதிலும் முதல் பாதி ரசிகர்களை முழுவதுமாகவே திருப்திப்படுத்தியிருக்கிறது.
அஜித் மிகவும் எனர்ஜியோடு இருக்கிறார். இப்படி அஜித்தை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. படத்தில் ரெட்ரோ பாடல் 3 இடங்களில் வருகிறது. அதில் ஒரு இடத்தில் ரசிக்க வைக்கிறது. படத்தின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. படத்தின் பிளஸ் என பார்த்தால் இவ்வளவுதான். அடுத்து மைனஸ் என்னவென பார்ப்போம்.

மேலோ சொன்னதை தவிர எல்லாமே படத்தின் மைன்ஸ்தான். முக்கியமாக மகனை காப்பாற்றவும், பழிவாங்கவும் அஜித் வருகிறார் என்பதே ஒன்லைனாக இருக்கிறது. அதை தவிர ரசிகர்களை ஒன்ற வைக்கும் அழுத்தமான கதை என எதுவுமே இல்லை. அதனால், படத்தோடு எமோஷனலாக ரசிகர்களால் ஒன்ற முடியவில்லை. இதுதான் குட் பேட் அக்லி படத்தின் மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது. படத்தின் கதையை ஆதிக் சிறப்பாக எழுதவில்லை.
படத்தின் வில்லனாக வரும் அர்ஜூன் தாஸ் கதாபாத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படவில்லை. அதேபோல் படத்தில் வரும் திரிஷா, சிம்ரன், பிரசன்னா, ஜாக்கி செராப், சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரின் கதாபாத்திரங்களுக்கு படத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. ரெட்ரோ பாடல் 3 இடத்தில் வருகிறது. ஒரு இடத்தில் ஓவர் டோஸாகி முகம் சுளிக்க வைக்கிறது.
படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் என இரண்டுமே பின்னணி இசைதான். பல இடங்களில் காதை கிழிக்கும் அதிகப்படியான சப்தம் கடுப்பேத்துகிறது. கதையில் பில்டப் வைக்காமல் படம் முழுக்க பில்டல் பில்டப் என்றால் ‘அட போங்கடா’ என்கிற மனநிலை வருகிறது. முதல் பாதியை ரசிக்க வைத்துவிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள். சரி இரண்டாம் பாதி செமயா இருக்கும் என பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. படத்தின் இரண்டாம் பாதியை சரியாக எழுதாமல் ஆதிக் ரவிச்சந்திரன் கோட்டை விட்டிருக்கிறார்.
பெரிய ஸ்டார் நடிகர் படங்களை முதல் வாரம் ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள். அதன்பின் படம் ஓடி வசூலை பெற வேண்டுமெனில் ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர வேண்டும். ஆனால், அவர்கள் ரசிக்கும்படி படத்தில் காட்சிகளே இல்லை. இதுவும் படத்தின் பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. படத்தில் இவ்வளவு மைன்ஸ் இருப்பதால் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா?.. வசூலை பெறுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.