Good bad ugly: ஏ.கே அஜீத் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் குட் பேட் அக்லி. ஸ்ஸ் யப்பா.. அஜீத் இப்டி படம் நடிச்சு எம்புட்டு நாளாச்சு என சொல்லும் வகையில் தன் புஜபல பராக்கிரமங்கள் அனைத்தையும் காண்பித்து அசத்தி இருக்கிறார்.
படத்துல கதைன்னு சொன்னா இப்ப நான் என்ன சொல்றது உங்ககிட்டனு வடிவேல் காமெடியில் வர்ற மாதிரி ஒண்ணுமே இல்ல. ஆனா படத்துல நிறைய அஜீத் ரசிகர்களுக்காக நிறைய ஃபேன் பாய் சம்பவம் இருக்கு.
இப்படத்தை இயக்கி இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் வளர்ந்து இவ்வளவு பெரிய இயக்குனராக மாறியும் இன்னும் பல வருடத்துக்கு முன்பு அஜீத் ரசிகராக தியேட்டரில் கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் மன நிலையிலேயே அவ்வளவு வெறித்தனமான அஜீத் ரசிகராக இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் அழகான அஜீத்தை இன்னும் மெருகேற்றி இன்னும் அழகாக்கி இருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக் நெஞ்சில் இருக்கும் முடிவரை அஜீத்துக்கு நரைத்திருந்தாலும் மாஸ் ஆன நடிகராக மேன்லி லுக் என சொல்லக்கூடிய வகையில் அழகாக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அஜீத் போட்டிருக்கும் கலர்புல் சட்டைகளை கூட பல ஆயிரம் கொடுத்து வாங்கியதாக இதற்கு முந்தைய பேட்டிகளில் ஆதிக் சொல்லி இருந்தார். அந்த அளவு தான் ரசித்த ஒரு நடிகருக்காக இவ்வளவு பார்த்து பார்த்து படம் இயக்கி இருக்கிறார் ஆதிக்.
படத்தின் கதை சிம்பிள், மிகப்பெரிய கேங்ஸ்டர் அஜீத், மனைவி திரிஷாவை திருமணம் செய்த உடன் மனைவி நீங்க இதையெல்லாம் விட்டுடணும் என நல்வழிப்படுத்த நினைக்கிறார், ஆனால் மகன் பிறந்த உடனேயே அதுவரை செய்த கேங்ஸ்டர் செயல்களால் அஜீத் ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. மகனை பல வருடம் பார்க்கவில்லை, மகனும் வளர்ந்து அப்பா எங்கே என அம்மாவிடம் கேட்கிறார். இந்த சூழ்நிலையில் பல வருடம் கழித்து ஜெயிலில் இருந்து வெளியே வரும் அஜீத் மகனை சந்திக்க முடியவில்லை.
காரணம் அஜீத்தின் மகனை வில்லன் குரூப் போதை பொருள் வைத்திருந்ததாக சதி செய்து ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறது. இந்த பழியில் இருந்தும் வில்லன் கேங்ஸ்டராக வரும் அர்ஜூன் தாஸ் கும்பலிடம் இருந்தும் மகனை மீட்டெடுப்பதுதான் கதை.
முதலில் அஜீத் அறிமுகமாகும் ஜெயில் சண்டை காட்சியில் ஆரம்பித்து இறுதி வரை பல மாஸ் மசாலா சண்டைகள் தூள் பறக்கின்றன. படத்தின் உண்மையான நாயகனாக ஜிவி பிரகாஷ்குமார் ஜொலிக்கிறார்.

ஏனென்றால் அஜீத் என்ற மாஸ் மெட்டீரியலுக்காக இரவு பகலாக உட்காந்து பிஜிஎம் கம்போஸ் செய்திருப்பார் போல அத்தனையும் கலக்கல் ரகம். நடிகர்களுக்கு ஓபனிங் சீனுக்காக மாஸ் பிஜிஎம் போடுவார்கள். இந்த படத்தில் அஜீத் வரும் அத்தனை காட்சியுமே ஓபனிங் போலத்தான். அது போல சரியான குத்து பாடல்களை ஜிவி பிரகாஷ்குமார் போட்டிருக்கிறார். மெலடி எல்லாம் கிடையவே கிடையாது.
அத்தனையும் அஜீத் ரசிகர்கள் எழுந்து ஆடும் பாடல்கள். இது போக ஒத்தை ரூபாயும் தாரேன், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, இளமை இதோ இதோ விழியில் உன் விழியில், சிம்ரன் வரும் சில காட்சிகளில் வாலி படத்தின் நியாபகங்கள், என எண்ணற்ற வைப் கிரியேட் செய்யும் விசயங்களை வைத்திருக்கிறார்.
படத்தின் முதல் காட்சியை பார்த்த வெளிநாடு வாழ் ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனங்களில் இடைவேளைக்கு பிறகு கதை இல்லை என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எதிர்மாறாய் ஜாலியாய் இப்படம் இருந்தது. முதல் காட்சியில் இருந்து ஜாலியாக , சண்டையாக, பாடலாக என எதையாவது காண்பித்துக்கொண்டேதான் இருந்தார்கள் தொய்வு என்பதே இல்லை. என்னை பொறுத்தவரை இந்த படம் கதையை வைத்து ஒடவைக்க வேண்டுமென்றோ, இல்லை சதையை வைத்து ஓடவைக்க வேண்டுமென்றோ ஆதிக் நினைக்கவில்லை. மாஸ் மியூசிக், பழைய பாடல்கள், அஜீத்தின் ஸ்டைல், அதிரடி சண்டைகாட்சிகள் என இவற்றை மட்டும் வைத்தே களம் கண்டிருக்கிறார். அதனால் கதையை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் லாஜிக் பார்க்காமல் ஜாலியாக பார்க்கும் அளவுக்குதான் படம் இருக்கிறது.
த்ரிஷா, அஜீத்தின் மைத்துனராக பிரசன்னா, முக்கியத்துவம் இல்லாத வேடத்தில் பொண்ணு கொடுத்துவிட்டார் என்ற காரணத்துக்காக ஆதிக்கின் மாமனார் பிரபு என அனைத்து பாத்திரங்களும் ஓகே ரகம்தான்.
படத்தில் மைனஸ் என்றால் இடைவேளைக்கு பின் சில பிளாஷ்பேக் காட்சிகள், வழக்கமாக சொல்லப்படும் கேங்க்ஸ்டர் பின்னணி கதை. இருந்தாலும் அவை எல்லாம் இப்படத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அஜீத் ரசிகர்கள் பலமுறை பார்க்கும் வகையிலும் மற்ற ரசிகர்கள் ஒரு முறையாவது பார்த்து ஓகே சொல்லும் வகையில்தான் இப்படம் இருக்கிறது. மோசம் எல்லாம் இல்லை. பக்கா கமர்சியல் படம் இது. ஏகேயின் ஃபேன் பாய்களுக்காக ஆதிக் என்ற அஜீத் ஃபேன் பாய் செய்த தரமான சம்பவம் தான் இப்படம்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், மற்றும் டி செரிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் சிறப்பான படம்
– -அபிராமி அருணாச்சலம்