குட் பேட் அக்லி சூப்பர் ஹிட்டுன்னு யார் சொன்னா?!.. போட்டு பொளந்த திருப்பூர் சுப்பிரமணியம்!..

good bad ugly
இப்போதெல்லாம் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் முதல் நாளே ரூ.100 கோடி வசூல் என அந்த நடிகர்களின் ரசிகர்களே சமூகவலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இது போன்ற செய்திகளை உண்மை என நம்பி ஊடகங்களும் தொலைக்காட்சிகளுமே செய்திகளை வெளியிடுகின்றன.
உண்மையில் ஒரு படத்தின் வசூல் என்ன?, படம் லாபமா? நஷ்டமா? என்பது அப்படத்தின் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் மூவி டிராக்கர்ஸ் என்கிற பெயரில் பலரும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். சில சமயம் சில தயாரிப்பாளர்களே பணம் கொடுத்து படம் அதிக வசூல் செய்தது போல போட சொல்கிறார்கள். இதைப்பார்க்கும் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் என்பதே அவர்களின் கணக்கு.
சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும். ஆனால், அந்த படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துவிடும். சில சமயம் இது அப்படியே உல்ட்டாகவும் நடக்கும். சில படங்கள் இருவருக்குமே நஷ்டத்தை கொடுத்துவிடும். ஆனால், இது எதையும் தெரிந்துகொள்ளாமல் படத்தின் வசூல் 500 கோடி, 1000 கோடி என ரசிகர்கள் சொல்லி வருவார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்கள் அஜித்தை திரையில் எப்படி பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்களோ அதை மனதில் வைத்து படத்தை இயக்கியிருந்தார் ஆதிக். ஏற்கனவே வெளியான அஜித் படங்களில் ரசிகர்கள் ரசித்த நிறைய காட்சிகளை இந்த படத்தில் ரீகிரியேட் செய்திருந்தார்.
இது அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, ரிப்பீட் மோடில் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்து வருகிறார்கள். படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் இப்படம் இந்தியாவில் மட்டும் 121 கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளையும் சேர்த்தால் இப்படம் 194 கோடி வரை வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. அதேநேரம் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே வசூலை பெற்றிருக்கிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ‘விஸ்வாசம் அளவுக்கு குட் பேட் அக்லி ஓடவில்லை. ஃபேன் பாய் படங்களுக்கு எதிர்காலம் இல்லை. அதை மக்களும் ரசிக்கமாட்டார்கள். விக்ரமின் வீர தீர சூரன் படமும் தோல்விதான். முன்னணி ஹிரோக்கள் கதையில் தலையிட்டு குழப்புவதால்தான் பல படங்கள் தோற்கிறது’ என பேசியிருக்கிறார்.