Good bad ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து உருவான குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக வெளியான அஜித் படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில் குட் பேட் அக்லி படத்தில் வரும் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு முழு விருந்தாக அமைந்தது.
ஏனெனில் அஜித் இதற்கு முன் நடித்த பல படங்கள் தொடர்பான காட்சிகளை சரியான இடத்தில் அதிக் ரவிச்சந்திரன் சரியாக பயன்படுத்தி இருந்தார். பில்லா, அமர்க்களம், வாலி, தீனா, மங்காத்தா போன்ற படங்களில் அஜித் ரசிகர்களுக்கு எதுவெல்லாம் கூஸ்பம்ஸ் கொடுத்ததோ அதை குட் பேட் அக்லியில் ஆதிக் ரீகிரியேட் செய்திருக்கிறார்.
அதோடு, இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தி இருக்கிறார். வழக்கமாக தனது பாடல்களை தனது முன் அனுமயின்றி பயன்படுத்தினால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்புவார்.

அதுபோல, குட் பேட் அக்லி படத்திற்கும் அவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், ஒரு வாரத்திற்குள் குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்றுள்ள என் பாடல்களை நீக்க வேண்டும். அந்த பாடலை பயன்படுத்தியற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதோடு, இதற்கு தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என அவர் தர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுபற்றி குட் பேட் அக்லி படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. அதில், குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சம்பந்தப்பட்ட இசை நிறுவங்களிடம் முறையே அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்தினோம். அந்த இசை நிறுவனங்களிடம்தான் காப்புரிமை இருக்கிறது. எனவே, அவர்களை தொடர்பு கொண்டு தடையில்லா சான்று பெற்றோம் எனவும் விளக்கமளித்திருக்கிறது.
இது வழக்கமாக சொல்லும்பதில்தான். அவர்கள் சொல்வது சரிதான் என்றாலும் அறிவுசார் சொத்து என்பதன் அடிப்படையில் இளையராஜா பல வருடங்களாக இப்படி வழக்கு தொடர்ந்து வருகிறார். இறுதியில் சில தயாரிப்பு நிறுவனங்கள் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து இதை சரிகட்டி விடுவதும் உண்டு.
குட் பேட் அக்லி விஷயத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.