அஜித் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்!.. அப்போ மத்தவங்களுக்கு?.. குட் பேட் அக்லி விமர்சனம்!

Published On: April 10, 2025
| Posted By : Saranya M

ஆதிக் ரவிச்சந்திரன் சொல்வதை எல்லாம் தலையாட்டி பொம்மை போல கேட்டுக் கொண்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினால் போதும் என அஜித் குமார் நடித்த படமாகவே குட் பேட் அக்லி படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்து வைத்த ரெட்ரோ பாடல்களை சண்டைக் காட்சிகளுக்கு பயன்படுத்தும் வித்தையை மார்க் ஆண்டனி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பாக காப்பியடித்து இருந்தார்.

குட் பேட் அக்லி படத்தில் இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸாக சென்று ஏகப்பட்ட ரெட்ரோ பாடல்களை அஜித்துக்காக வைத்துள்ளார். பாடல்கள் மட்டுமின்றி ரெட்ரோ சீன்களை வைத்தே ஒரு படத்தை ஓட்டிக் காட்டுகிறேன் என ஆதிக் ரவிச்சந்திரன் கிண்டி வைத்திருக்கும் ரசிகர்களுக்கான பிரியாணி தான் குட் பேட் அக்லி.

பெரிய கேங்ஸ்டர் எப்படி த்ரிஷாவை காதலித்தார், கல்யாணம் பண்ணார் என்பதை எல்லாம் காட்டாமல், குழந்தையை மட்டும் தொடக்கூடாது என த்ரிஷா சொன்னதும் 18 வருஷம் சிறை வாசம் அனுபவித்து வருகிறார். மீண்டும் மகனுக்காக வெளியே வரும் ஏகே தனது மகன் சிறைக்கு செல்வதை பார்த்து ஷாக் ஆகிறார்.

போதைப் பொருள் வழக்கில் மகனை ஸ்பெயின் நாட்டில் சிக்க வைக்க, இதற்கும் உன்னுடைய பழைய லைஃப் ஸ்டைல் தான் காரணம் என த்ரிஷா சொல்கிறார். தனது மகனை எப்படியாவது மீட்க வேண்டும் என மீண்டும் ரெட் டிராகனாக மாறும் அஜித் குமார் முதல் பாதியில் குட்டாகவும் இரண்டாம் பாதியில் பேட் மற்றும் அக்லியாக மாற தியேட்டரே தெறிக்கிறது.

பிரசன்னா மற்றும் சுனில் அஜித் குமாரின் ரைட் மற்றும் லெஃப்ட் ஹேண்டுகளாக படம் முழுக்கவே வருகின்றனர். நல்லவேளை எந்தவொரு முதுகு குத்துற சீனையும் இவர்களை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் வைக்காதது ரொம்ப நல்ல விஷயம்.

சிம்ரன் வரும் காட்சிக்கும் அவரது பாடலுக்கு பிரியா வாரியர் உடன் அர்ஜுன் தாஸ் போடும் ஆட்டமும் அல்டிமேட். அஜித்துக்கு 2 கெட்டப், 3 கெட்டப் எல்லாம் கொடுக்காமல், கஜினி படத்தில் வருவது போல வில்லன் அர்ஜுன் தாஸுக்கு டபுள் ஆக்‌ஷன் கொடுத்ததும் பாராட்டுதலுக்குரியது.

குட் பேட் அக்லி படத்தில் ஓவர் பில்டப்புடன் அஜித் நடித்திருக்கிறார். வில்லன் போர்ஷன் வழக்கமான அஜித் படங்களை போல ரொம்பவே வீக் தான். அர்ஜுன் தாஸ் யாரை காசு கொடுத்து அஜித்தை காலி செய்ய சொன்னாலும் அவர்களும் அஜித்தை பார்த்து அலறுவது எல்லாம் பொறுமையை சோதிக்கிறது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை கங்குவா படத்தை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது. கொஞ்சம் சவுண்டை குறைங்க பாஸ் என காதுகளை பொத்திக் கொள்ள வைக்கிறது.

அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், மற்றவர்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு படம் எடுக்கவில்லையே என்கிற வருத்தம் வரத்தான் செய்கிறது. கண்டிப்பாக இதையெல்லாம் ஓடிடியில் பார்த்தால் வேஸ்ட் தான். தியேட்டருக்குச் சென்று ஒருமுறை பார்த்துவிடுங்க!

குட் பேட் அக்லி ரேட்டிங்: 3.25/5.