சரத்குமார் ஹீரோதான்!. ஆனா நாட்டாமை படத்தில் கவுண்டமணி சம்பளம் என்ன தெரியுமா?!..
கோவையை சேர்ந்த கவுண்டமணி துவக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர். பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் பாக்கியராஜின் புண்ணியத்தால் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், பாரதிராஜா அடுத்து இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமனிக்கு முக்கிய வேடம் பாக்கியராஜாலேயே கிடைத்தது.
அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் நடிகர் செந்திலையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தனி டிராக் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அதாவது படத்தின் கதைக்கு தொடர்பில்லாமல் கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சிகள் தனியாக படத்தின் இடையிடையே வரும்.
ஒருகட்டத்தில் கவுண்டமணியின் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற ஹீரோக்களின் நண்பனாக நடிக்க துவங்கினார். ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என முதலில் பணம் வாங்கியவர் கவுண்டமணி மட்டுமே. இப்போது யோகிபாபு தினமும் ரூ.10 லட்சம் வாங்குகிறார் எனில் அதற்கு விதை போட்டது கவுண்டமணிதான்.
90களில் பல படங்களின் வெற்றிக்கு கவுண்டமணி தேவைப்பட்டார். எனவே, அவருக்கு டிமாண்ட் அதிகரித்தது. எனவே, ஹீரோவுக்கு சமமான சம்பளம் தர வேண்டும், படம் முழுக்க இரண்டாவது ஹீரோ போல வருவேன், எனக்கு ஒரு ஜோடி வேண்டும், பாடல் மற்றும் சண்டை காட்சி வேண்டும் என அடம்பிடித்தார் கவுண்டமணி. இது எல்லாமே கவுண்டமணிக்கு கிடைத்தது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து 1994ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம்தான் நாட்டாமை. இப்படத்தில் கவுண்டமணி - செந்திலும் காமெடி மிகவும் சிறப்பாக இருக்கும். வயதான அப்பா என்றாலும் அவரை வாடா போடா என அழைத்து அதிரி புதிரி செய்திருப்பார் கவுண்டமணி.
இந்த படம் பற்றி சமீபத்தி ஊடகம் ஒன்றில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் ‘நாட்டாமை படத்தில் எனக்கும், சரத்குமாருக்கும், கவுண்டமணிக்கும் ஒரே சம்பளம்தான். நாங்கள் எல்லோரும் ரூ.5 லட்சத்தை சம்பளமாக வாங்கினோம்’ என சொல்லி இருக்கிறார்.