எவன் இந்த படத்துக்கு கதை எழுதுனது?- சிங்கம்புலியை வெளுத்துவாங்கிய கவுண்டமணி… ஏன் தெரியுமா?
கவுண்டமணி உச்சம் தொட்ட காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவரது கவுண்ட்டர் வசனங்களை ரசிக்காத ரசிகர்களே கிடையாது. இப்போதும் கவுண்டமணி-செந்தில் காம்போவில் உருவான பல காமெடி காட்சிகளை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.
இந்த நிலையில் கவுண்டமணி நடித்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கம்புலி கதை வசனம் எழுதியிருக்கிறார். அப்போது நடந்த ஒரு காமெடி சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
கடந்த 2000 ஆம் ஆண்டு கார்த்திக், மந்த்ரா, திவ்யா உன்னி, கவுண்டமணி, செந்தில், மனோரமா ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம், “கண்ணன் வருவான்”. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். சுந்தர் சி எப்போதும் காமெடியான திரைப்படங்களையே இயக்குபவர். ஆனால் இத்திரைப்படம் ஒரு சீரீயஸான சென்டிமென்ட் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் இப்படிப்பட்ட சென்டிமென்ட் திரைப்படம் என்று தெரியாமல் கவுண்டமணி இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இத்திரைப்படத்தில் கார்த்திக் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், அப்போது கவுண்டமணி வெளிநாட்டில் இருந்து திரும்பும் கார்த்திக்கிற்கு மிகவும் பிடிக்கும் என சிக்கன் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளை தயார் செய்து வைத்திருப்பார்.
ஆனால் கார்த்திக்கோ அதை விரும்பாமல் மனோரமா ஊட்டிய பால் சாதத்தை விரும்பி சாப்பிடுவார். இந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு இரவு கவுண்டமணி அத்திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சுராஜ்ஜை அழைத்து, “எங்க ஊர்ல நாய்க்குத்தான்யா பால் சோறுலாம் தருவாங்க. என்னய்யா படம் எடுக்குறீங்க. உங்களுக்கு தேவை இல்லாத சப்ஜெக்டுலாம் எடுக்குறீங்க. நீங்க காமெடி படம் எடுப்பீங்கன்னுதானேயா நான் வந்தேன். இந்த படம் என்ன சென்டிமென்ட்டா இருக்குது. யாருய்யா இந்த படத்துக்கு கதை வசனம்” என டென்ஷன் ஆகி கத்தினாராம். இந்த சம்பவத்தை தனது பேட்டி ஒன்றில் இயக்குனர் சுராஜ் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டுள்ளார்.