“இவுங்களை நம்பியா கட்சி தொடங்கப்போற”… ராமராஜனை கவுண்ட்டர் அடித்து கலாய்த்த கவுண்டமணி…
1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரின் திரைப்படங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு ஓடிய காலத்தில் சைலண்ட்டாக புகுந்து ரசிகர்களின் மனதில் பட்டறையை போட்டவர் ராமராஜன். “மக்கள் நாயகன்” என்று போற்றப்படும் ராமராஜன் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது.
டிக்கெட் கிழித்த ராமராஜன்
ராமராஜன் சினிமா உலகில் நுழையும் முன்பு அவரது சொந்த ஊரில் ஒரு திரையரங்கில் டிக்கெட் கிழிப்பவராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் பணியாற்றிய திரையரங்கில் பல திரைப்படங்களை ரசித்து ரசித்து பார்த்த ராமராஜன், தானும் சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என நினைத்தார்.
ராம நாராயணன்
தமிழின் பிரபல இயக்குனரான ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராமராஜன், சில திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அதனை தொடர்ந்து “நம்ம ஊரு நல்ல ஊரு” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
திருமணம்-விவாகரத்து
“நம்ம ஊரு நல்ல ஊரு” திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்த ராமராஜன், 1987 ஆம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்துகொண்டார். எனினும் கடந்த 2000 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
அரசியல் பிரவேசம்
ராமராஜன் வளர்ந்து வந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக திகழ்ந்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு நாள் ஜெயலலிதா, ராமராஜனின் இல்லத்திற்கே சென்று அவரது குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலி அணிவித்தாராம். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அன்புக்குரியவராக ராமராஜன் திகழ்ந்தார்.
ஜெயலலிதாவுடனான விரிசல்
ராமராஜன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் வெள்ளி விழாவில் ஜெயலலிதா கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ராமராஜன்தான் என அவரது ஆதரவாளர்கள் பேசி வந்தனர். ஆதலால் ஜெயலலிதா அந்த வெள்ளிவிழாவில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து “ஊரு விட்டு ஊரு வந்து” என்ற திரைப்படத்தில் நடித்தார் ராமராஜன்.
அத்திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் ராமராஜன் அதிமுகவில் இருந்து விலகினாராம். அதனை தொடர்ந்து அத்திரைப்படம் சரியாக ஓடவில்லையாம். எனினும் சில நாட்களில் ராமராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். எனினும் இந்த இடைப்பட்ட காலத்தில் ராமராஜன் சொந்தமாக ஒரு கட்சியை தொடங்கினாராம்.
ராமராஜனை கலாய்த்த கவுண்டமணி
1991 ஆம் ஆண்டு ராமராஜன், ரூபினி, கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு”. இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ராமராஜன் புதிய கட்சி ஒன்றை தொடங்கினாராம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் ராமராஜனுக்கு பெரிய மாலை அணிவித்து அவரை பாராட்ட அவரது ரசிகர்கள் ஒரு வாகனத்தில் ஏறி வந்தார்களாம்.
இதையும் படிங்க: இமயமலை சித்தர் சொன்ன மந்திரம்… சந்திரமுகியில் டிரெண்டான “லகலகலக” வார்த்தை வந்தது இப்படித்தான்…
அப்போது அங்கிருந்த கவுண்டமணி, “இந்த மாதிரி வண்டியில் வருபவர்களை எல்லாம் நம்பாதே. யார் யார்கிட்டயோ டீசல் கடன் வாங்கி போட்டு வந்திருப்பான். எங்கையோ இருந்து ரொம்பவும் விலை கம்மியா ஒரு மாலையை தேடி பிடிச்சி வாங்கிட்டு வந்துருப்பான். இவிங்கள நம்பி நீ கட்சி ஆரம்பிக்கப் போறியா?. நடிக்குறதுதான் உன்னோட வேலை, அதை மட்டும் பாரு” என ராமராஜனுக்கு அறிவுரை கூறினாராம்.