இசை சம்பந்தமான தமிழ்ப்படங்கள் - ஓர் சிறப்புப் பார்வை
தமிழும் இசையும் ஒன்றுடன் ஒன்று கலந்தது. அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாதது. தமிழ்ப்படங்கள் இவற்றைப் புரிந்து கொண்டு இசை சம்பந்தமான பல படங்களைத் திரைக்குத் தந்துள்ளது. அவற்றில் ஒரு சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
கொஞ்சும் சலங்கை
1962ல் வெளியான இப்படத்தை எம்.வி.ராமன் இயக்கினார். ஜெமினிகணேசன், சாவித்திரி இணைந்து நடித்த இந்தப்படம் அக்கால ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருப்பார்கள். நாதஸ்வர இசைக்கலைஞராக ஜெமினிகணேசன் நடித்துள்ளார்.
காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வர இசையில் புகழ் பெற்றவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர் இசை அமைத்த சிங்கார வேலனே தேவா என்ற புகழ்பெற்ற பாடல் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றது. எஸ்.ஜானகி வெகுரசனையாகப் பாடியிருப்பார். காண கண்கோடி வேண்டும் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. நாதஸ்வர இசைக்கும், பாடலுக்கும் இடையே கடும் போட்டி நடக்கும். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு பெயரே வித்தியாசமாக இருந்ததால் அனைவரையும் பார்க்கத் தூண்டியது. இந்தப்படம் பார்க்க அப்போது டிக்கெட் எவ்வளவு என தெரியுமா? வெறும் 75 காசுகள் தான். படத்தின் போஸ்டரைப் பார்த்தால் உங்களுக்கேத் தெரியும்.
மிருதங்க சக்கரவர்த்தி
1983ல் வெளியான இந்தப்படத்தில் சிவாஜிகணேசன் ஒரு மிருதங்க வித்வானாக நடித்து அசத்தியிருப்பார். நிஜமான கலைஞராகவே மாறியிருப்பார். கே.சங்கர் இயக்கிய படம். சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, பிரபு, எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, கிருபானந்த வாரியார், தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் சிவாஜிக்கும், பிரபுவுக்கும் இடையே மிருதங்கப் போட்டி நடக்கும். வெகு ரசனையாக இருக்கும். சிவாஜியின் முகபாவனை ரசிக்க வைக்கும். இந்தப் போட்டி சுமார் 9 நிமிடங்களுக்கு நடக்கும். மிருதங்கத்தில் விரல்கள் நாட்டியமாடும். இசை நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடும். ஓம் நாதம் ஓம் கார நாதம், இது கேட்க திகட்டாத, அடி வண்ணக்குயிலே, கோபாலா கோவிந்தா முகுந்தா, அபிநய சுந்தரி ஆடுகிறாள், சுகமான ராகங்களே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
டூயட்
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் இயக்கிய இப்படம் 1994ல் வெளியானது. பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்ரி, பிரகாஷ் ராஜ், சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக இருந்தன. இந்தப்படம் முழுவதும் இசை சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரசிகர்களை ரசிக்க வைத்து விட்டது. வெண்ணிலவின் தேரில் ஏறி, மெட்டுப்போடு, அஞ்சலி அஞ்சலி, கத்திரிக்காய், நான் பாடும் சந்தம், என் காதலி, குளிச்சா குத்தாலம் ஆகிய பாடல்கள் நம்மை தாளம் போட வைக்கின்றன.
கரகாட்டக்காரன்
கங்கை அமரன் இயக்கத்தில் உருவான இந்தப்படம் கரகாட்டக்காரர்களுக்கு சமர்ப்பணமாக அமைந்தது. படம் முழுக்க கரகாட்டத்தையும் அதற்கான இசையையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாயின. இந்தப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். பாட்டாலே புத்தி, இந்த மான், குடகுமலைக்காற்றில், மாங்குயிலே பூங்குயிலே, மாரியம்மா..., முந்தி முந்தி வினாயகரே, நந்தவனத்தில் ஒரு, ஊரு விட்டு ஊரு வந்து ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றன.
முகவரி
2000ல் வெளியான இந்தப்படம் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமாருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த படம். வி.இசட்.துரை இயக்கிய இந்தப் படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜீத்குமாருடன் ஜோதிகா, ரகுவரன், விவேக், மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையை மையமாகக் கொண்டு உருவாக்ககப்பட்ட படம். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. ஏ...ஹே...ஹே...கீச்சுக்கிளியே, ஏ...நிலவே நிலவே, ஓ...நெஞ்சே, ஆண்டே நூற்றாண்டே, பூ விரிஞ்சாச்சு ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இவை தவிர தில்லானா மோகனாம்பாள், சிந்து பைரவி, தோடி ராகம், மௌனராகம், வசந்த ராகம், ஒரு தலை ராகம், கிழக்கு வாசல் ஜோடி, மொழி, பாய்ஸ் ஆகிய படங்களும் திரையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.