திறமையான நடிப்பால் சாதனை படைத்த போதிலும் சொந்தப்படம் எடுத்து உருக்குலைந்த பழம்பெரும் நடிகை
சரித்திரப்படங்கள், சமூகப்படங்கள் என்று எவ்வகையானாலும் சரி. தனது சிறந்த நடிப்பு, உயிரோட்டமான வசனம் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கண்ணாம்பா. இவர் தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அதே போல் மாறிவிடுவார். குறிப்பாக அம்மா கேரக்டர் என்றால் இவருக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி. வெளுத்து வாங்கி விடுவார்.
கூர்மையான மூக்கு, உயர்ந்த நெற்றி, ஆந்திரப்பெண்களுக்கே உரிய உயரம் என கம்பீரமான அடையாளங்களுடன் தமிழ்சினிமாவுக்கு வந்தார் கண்ணாம்பா. அதே போல் குரலில் கம்பீரம், கண்களில் கனிவு, பாத்திரத்தின் தன்மைக்கேற்ப கண்களை உருட்டி விழிக்கும் அழகு, ஏற்ற இறக்க பேச்சு என தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டார்.
தெலுங்கே இவரது தாய்மொழி என்றாலும் தமிழ்சினிமாவில் தவறில்லாமல் நீண்ட வசனங்களையும் தடையின்றி பிழையின்றி அசாதாரணமாகப் பேசி அனைவரது பாராட்டுகளையும் பெறுவார்.
உதாரணமாக பூம்புகார் படத்தில் இவர் ஏற்ற கண்ணகி கதாபாத்திரத்தைச் சொல்லலாம். கண்ணகியை நேரில் பார்க்காதவர்கள் கூட இப்படித் தான் இருப்பார் என்பதை தத்ரூபமாக தனது விழியசைவால் காட்டியிருப்பார் கண்ணாம்பா.
தியாகாராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருக்கு ஜோடியாகவும், சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினிகணேசன் ஆகியோருக்கு அம்மாவாகவும் நடித்துப் புகழ்பெற்றவர் கண்ணாம்பா. இவரது இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்தக்காலத்தில் சினிமா உலகிலேயே கதாநாயகர்களை விட லட்சக்கணக்கில் அதிகமாக சம்பளம் வாங்கியவர் கண்ணாம்பா தானாம்.
ஆந்திரமாநிலம் கடப்பாவில் எம்.வெங்கனரசையா, லோகாம்பாள் தம்பதியினருக்கு 1911ல், அக்டோபர் 5ல் ஒரே மகளாகப் பிறந்தார். பசுபலேட்டி என்பது இவரது குடும்பப் பெயர். தந்தையார் ஆந்திர அரசு ஒப்பந்ததாரராகப் பணியாற்றினார். குடும்பத்தில் ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டார்.
ஆனாலும் குடும்ப சூழல் காரணமாக மேல் கோதாவரி ஜில்லாவான ஏழூருவில் தாயின் பெற்றோர்களது வீட்டில் விடப்பட்டு வளர்க்கப்பட்டார். இவரது தாத்தா நாதமுனிநாயுடு கிராம வைத்தியர். அவரது பாட்டியும் மருத்துவச்சி.
கண்ணாம்பாவிற்கு சிறுவயது முதலே இசையில் நாட்டம் இருந்ததால் அவரது தாத்தாவின் மேற்பார்வையில் கர்நாடக சங்கீதம் கற்று வந்தார். இதன் வாயிலாக அவர் இசை மற்றும் நாடகங்களில் நடிக்க அவரது தாத்தாவால் ஏழூருவிலேயே அரங்கேற்றம் ஆனது. இதனால் அவர் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
1927ல் நாரலா நாடக சபாவின் மூலம் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றார். தொடர்ந்து அவர்களது நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இந்நிலையில் அந்நாடக சபாவின் நிர்வாகியான நாக பூஷணம் என்பவர் கண்ணாம்பாவின் அபரிமிதமான கலைத்திறனைக் கண்டு வியந்து அவர் மேல் காதல் கொண்டார். தொடர்ந்து கண்ணாம்பாவின் பெற்றோர், தாத்தா பாட்டியின் சம்மதத்துடன் 1934ல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அந்த ஆண்டிலேயே இருவரும் சேர்ந்து ஸ்ரீராஜராஜேஸ்வரி நாட்டிய மந்திலி என்ற புதிய நாடகக்குழுவைத் தொடங்கினர். இதன் மூலம் அன்றைய சென்னை மாநகரம் முழுவதும் நாடகங்கள் நடத்தினர். அபாரமாக நடித்த கண்ணாம்பா மிகப்பெரிய நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டார்.
நாடகங்களில் புகழ்பெற்று வளர்ந்த போதும், இந்தத் தம்பதியினருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் ஆண் மற்றும் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில் தான் ஸ்டார் கம்பைன்ஸ் என்ற பெயரில் திரைப்படங்கள் தயாரித்து வந்த ராமையா என்பவர் கண்ணாம்பாவை ஹரிச்சந்திரா படத்தில் நடிக்க அணுகினார். கணவரின் சம்மதத்துடன் கண்ணாம்பா அந்தப்படத்தில் நடித்தார்.
1935ல் இந்தப்படம் வெளியானது. சந்திரமதி கேரக்டரில் நடித்த கண்ணாம்பா முதல் படத்திலேயே மக்களால் பெரிதும் கவரப்பட்டார். 1936ல் திரௌபதி வஸ்திராபரணம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். திரௌபதியாக நடித்த கண்ணாம்பாவை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து வரவேற்றனர். அடுத்ததாக கனகதாரா என்ற படத்தில் நடித்தார்.
இதில் அவருக்கு பெரும்புகழ் கிடைத்தது. எச்.எம்.ரெட்டி, பி.என்.ரெட்டி ஆகியோருடன் இணைந்து கிருகலெட்சுமி என்ற படத்தை சொந்தமாக எடுத்தார் கண்ணாம்பா. இந்தப்படம் 1938ல் வெளியானது. ராதா என்ற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்தப்படம் சென்னையிலும் வெற்றிகரமாக ஓடியது.
தமிழ்ப்பட தயாரிப்பாளர்களும் இவரை வைத்து தமிழில் படம் எடுக்க ஆசைப்பட்டனர். ராஜகோபால் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் ஸ்ரீ கிருஷ்ணன் தூது என்ற படத்தை எடுத்தனர். அதில் கண்ணாம்பா நடித்தார். இதுதான் அவரது முதல் தமிழ்ப்படம். திரௌபதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு நன்றாக இருந்த போதும் அவரது தமிழ் உச்சரிப்பு படம் தோல்வியாகக் காரணமாக அமைந்தது. மொழிப்பிரச்சனையால் தான் படம் தோல்வி என்றதைக் கேட்ட கண்ணாம்பா உடனடியாக அதை சவாலாக எடுத்துக் கொண்டு தமிழ் கற்கத் தொடங்கினார்.
அடுத்து அவர் நடித்த படம் அசோக்குமார். இதில் வசனகர்த்தா இளங்கோவன் கண்ணாம்பாவிற்கு செந்தமிழில் பேச தெளிவாக பயிற்சி அளித்தார். இதே படத்தில் பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களையும் சொந்தக்குரலிலேயே பாடி அசத்தியுள்ளார். இந்தப்படத்தில் அவர் பேசிய இனிய தமிழ் பாகவதருக்கே சவால் விட்டது.
1941ல் வெளியான இப்படத்தில் கண்ணாம்பாவின் நடிப்பு இன்று வரை பேசப்படுகிறது. படத்தில் நடனம் ஆடத் தெரியாவிட்டாலும் அதற்காகவே நேரம் ஒதுக்கிக் கற்றுக்கொண்டு முடிந்தளவில் அபிநயம் பிடித்து சில காட்சிகளில் நடனமாடியும் அசத்தியுள்ளார். சங்கிலி என்ற படத்தில் சண்டிகையாக நடித்து சூப்பர் ஹீரோயின் ஆனார்.
தொடர்ந்து ஜூபிடர் பிலிம்சில் கண்ணகியாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார். பியு.சின்னப்பாவுடன் இணைந்து ஹரிச்சந்திரா படத்தை சொந்தமாகத் தயாரித்தார். பின்னர் பியு.சின்னப்பாவுடன் இணைந்து அர்த்தநாரி, துளசி ஜலந்தர், மங்கையர்க்கரசி, சுதர்ஸன் என பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.
ஒருமுறை கண்ணாம்பாவுடன் மது அருந்தி விட்டு வந்து பி.யு.சின்னப்பா நடிக்க கண்ணாம்பா கோபத்துடன் பேசியுள்ளார். பியு.சின்னப்பா குடித்து விட்டு நடிப்பது சாதாரண விஷயம். கண்ணாம்பா இப்படி கேட்டதும் செட்டே அசந்து விட்டது. உடனே கண்ணாம்பாவிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். உடனே கண்ணாம்பா எனக்கு என்னமோ நீங்க குடிக்கறது பிடிக்கல. நான் சொன்னது தவறா இருந்தா மன்னிச்சுக்கங்கன்னு பெருந்தன்மையுடன் கூறினார்.
1950களுக்குப் பிறகு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். சிவாஜிக்கு அம்மாவாக கதாபாத்திரத்தில் நடித்தது தான் அதிகமாகப் பேசப்பட்டது. மனோகரா, மக்களைப் பெற்ற மகாராசி, வணங்கா முடி, உத்தமப்புத்திரன், காத்தவராயன், படிக்காத மேதை, புனர்ஜென்மம், படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்கள் தான் அவரது வெற்றிக்கு மணிமகுடத்தைச் சேர்த்தன.
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நடித்த அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்குக் காரணமானது.
பொறுத்தது போதும். பொங்கி எழு என்ற அவரது வசனம் இன்று வரை ட்ரெண்ட் ஆனது. தாய் சொல்லைத்தட்டாதே, தாயைக்காத்த தனயன், நீதிக்குப்பின் பாசம் என எம்ஜிஆரின் படங்களிலும் கண்ணாம்பா தனது நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கண்ணாம்பா எம்ஜிஆரை வைத்து தாலிபாக்கியம் என்ற படத்தைத் தயாரித்தார். படத்திற்கான படப்பிடிப்பு கர்நாடகாவில் நடத்தப்பட்டது. எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார் நடித்துள்ளனர். ஒருநாள் தயாரிப்பாளர் தரப்பில் உள்ள மொத்த பணமும் திருடு போனது. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்.
தொழிலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்க முடியவில்லை. எம்ஜிஆருக்கு இந்தப் பிரச்சனை கொண்டு வரப்பட்டது. அவரும் எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனைவருக்கும் சம்பளமும் கொடுத்து உதவினார். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்தநிலையில் தியாகராஜாநகரில் தனது வீட்டை விற்க முடிவு செய்த சூழலில் எம்ஜிஆர் நீங்கள் விற்க வேண்டாம். இறுதிவரை இந்தவீட்டில் தான் இருக்க வேண்டும் என்று அவருக்குக் கூற, அவரும் இருந்துள்ளார். அவர் இறந்த பிறகு தான் எம்ஜிஆர் அந்த வீட்டைப் பயன்படுத்திக் கொண்டார். அந்தக்காலத்தில் தமிழ்த்திரை உலகில் கே.பி.சுந்தராம்பாளுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை கண்ணாம்பா தான். அப்போது இவருக்கு ஒரு படத்தில் நடிக்க சம்பளம் 85 ஆயிரம் ரூபாய். இவை அனைத்தையும் சொந்தப்படமாக தயாரித்து தோல்வி அடைந்த கண்ணாம்பா, 1964 மே 7ல் புற்றுநோயால் காலமானார்.