இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் “வெயில்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த ஜி.வி.பிரகாஷ் அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் தற்போது மிகச் சிறந்த நடிகராகவும் உருவாகியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியான ஏ.ஆர்.ரெய்ஹனாவின் மகன் என்பதை பலரும் அறிவார்கள். சிறு வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்திருக்கிறது. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ், “வெயில்” திரைப்படத்திற்கு இசையமைக்க நேர்ந்தது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை குறித்து இப்போது பார்க்கலாம்.
“வேலை”, “என்னவளே”, “ஜூனியர் சீனியர்”, ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவர் தற்போது குக் வித் கோமாளி புகழை வைத்து “மிஸ்டர் ஜூ கீப்பர்” என்று ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெ.சுரேஷ் இயக்கத்தில் வெளியான “ஜூனியர் சீனியர்” திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஜெ.சுரேஷ் ஏற்கனவே விளம்பரப்பட இயக்குனராக இருந்தார். ஆதலால் “ஜூனியர் சீனியர்” திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் விளம்பரப்படத் துறைக்குச் சென்றுவிட்டார் ஜெ.சுரேஷ்.
அந்த காலகட்டத்தில் ஐயப்பன் பக்தி பாடல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்த சுரேஷ், ஒரு இசையமைப்பாளரை அழைத்து தனது யோசனையை கூறினார். அப்போது அந்த இசையமைப்பாளருக்கு உதவியாளராக வந்தவர்தான் ஜி.வி.பிரகாஷ்.

அந்த பாடல் பதிவு முடிந்த பிறகு ஒரு நாள், இயக்குனர் ஷங்கரையும் பாலாஜி சக்திவேலையும் ஒரு பார்ட்டியில் சந்தித்தார் ஜெ.சுரேஷ். அப்போது பாலாஜி சக்திவேல், தான் ஒரு படம் இயக்கப்போவதாகவும், அதில் ஒரு புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப்போவதாகவும் தனது யோசனையை குறித்து கூறியிருக்கிறார்.
அப்போது ஜெ.சுரேஷ், “சார் என் கிட்ட ஒரு பையன் இருக்கான். அபாரமாக வாசிப்பான்” என கூறியுள்ளார். “யார் அந்த பையன்?” என கேட்க, அதற்கு ஜெ.சுரேஷ், அருகில் இருந்த ஷங்கரை பார்த்து “சார், உங்களுக்கு அந்த பையனைத் தெரியும். உங்க ஜென்டில்மேன் படத்துல சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாட்டுல அந்த பையன் பாடிருக்கான்” என கூற ஷங்கருக்கு ஜி.வி.பிரகாஷின் முகம் ஞாபகம் வந்திருக்கிறது.

அதன் பின் ஒரு நாள் ஜி.வி.பிரகாஷ், பாலாஜி சக்திவேலை சந்திக்க சென்றார். ஆனால் ஜி.வி.பிரகாஷின் இசை பாலாஜி சக்திவேலுக்கு திருப்தியாக இல்லை. அந்த நேரத்தில்தான் இயக்குனர் வசந்தபாலன் “வெயில்” திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த பி ஆர் ஓ ஒருவர் ஜி.வி.பிரகாஷை பற்றி அவரிடம் கூற, வசந்தபாலனும் அவரை வரச்சொன்னாராம். அதன் பிறகு ஜி.வி.பிரகாஷின் இசை பிடித்துப்போக “வெயில்” திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார் வசந்தபாலன்.