ஹிட் படத்தை இயக்கிய நிலையிலும் குற்ற உணர்ச்சியில் அலைந்த ஹெச்.வினோத்… என்ன மனிஷன்யா!!
கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்தி, ரகுல் பிரீத் சிங் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார் என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
தமிழ்நாட்டு போலீஸாரால் நடத்தப்பட்ட “ஆப்ரேஷன் பவாரியா” என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவானது. இத்திரைப்படத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த பவாரியா என்ற கும்பல், மிகக் கொடூரமாக கொலை செய்து கொள்ளையடிப்பதை போன்ற பல காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன.
இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. இத்திரைப்படத்தின் தாக்கத்தால் வட இந்தியாவை சேர்ந்த துணி விற்கும் வியாபாரி ஒருவரை ஒரு கும்பல் தாக்கியதாக கூட செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஹெச்.வினோத், “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தின் மூலம் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தீரன் திரைப்படத்தில் என்கவுண்ட்டர் செய்வது போல் காட்சி வைத்ததற்கு பலரும் வருத்தப்பட்டார்கள். மேலும் தீரனில் எனக்கு உளவியல் ரீதியாக ஒரு பிரச்சனை வந்தது. அதாவது எங்கேயாவது ஒரு வட இந்தியர் தாக்கப்பட்டார்கள் என்றால் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.
ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘ஒரு படம் எடுத்துவிட்டதால் நீ ஜெயித்துவிட்டாய். ஆனால் தமிழ்நாட்டில் வியாபாரம் பார்க்கும் வட இந்தியரை யாராவது அடித்துவிட்டால் நீ பொறுப்பேற்றுக்கொள்வாயா?” என கேட்டார். இந்த கேள்வி எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை உண்டு செய்தது. அந்த காலகட்டத்தில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த குற்ற உணர்ச்சிதான் வலிமையில் என்கவுண்ட்டருக்கு எதிராக ஒரு கதாப்பாத்திரத்தை உண்டு செய்ய தூண்டியது” என ஹெச்.வினோத் அப்பேட்டியில் கூறியிருந்தார்.