ஓடிடி ஹீரோவாக மாறும் ஹரிஷ் கல்யாண்: அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Oh Manapenne
சிந்து சமவெளி படத்தில் அமலாபாலுடன் இணைந்து தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இப்படத்தில் இவர் ரோலுக்கு முக்கியத்துவம் இல்லாததால் இவர் வெளியுலகிற்கு பரவலாக அறியப்படவில்லை. இதன்பின் பொறியாளன், வில் அம்பு என பல படங்களில் நாயகனாக நடித்தார்.
இதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதன்பின்னர் பலராலும் பரவலாக அறியப்பட்டார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Oh Manapenne
இப்படம் தெலுங்கில் கடந்த 2016ல் விஜய் தேவராக்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் 'பெல்லி சூப்புலு' என்ற பெயரில் வெளியாகி தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. அப்போதே இப்படத்தை தமிழில் விஷ்ணு விஷால், தமன்னாவை வைத்து அறிமுக இயக்குனர் இயக்கப்போவதாக தகவல் வந்தது.
இதை கவுதம் மேனன் தயாரிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. பின்னர் சில நாட்களில் அது கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 'ஓ மணப்பெண்ணே' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹரிஷ் கல்யாணின் 'கசட தபற' படமும் ஓடிடி-யில்தான் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் என்பவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.