More
Categories: Cinema History Cinema News latest news

வரலாற்று நாயகர்களின் கதையை சுமந்து வந்த படங்கள்

தமிழ்சினிமாவில் வீர தீர வரலாற்று நாயகர்களின் கதையைப் பார்க்கிறோம் என்றால் நமக்கு கொண்டாட்டம் தான். அவர்களது வீரம், கொடை, காதல், அந்தக்காலத்து பின்னணி அம்சங்கள் என படத்தில் வியந்து பார்ப்பதற்கு என்று நமக்கு பல ஆச்சரியங்கள் கொட்டி கிடக்கின்றன.

அந்தப்படங்களின் கதையும், காட்சி அமைப்புகளும் நம்மை அந்தக்கால கட்டத்திற்கே கொண்டு சென்றுவிடும். குறிப்பாக வரலாறு மற்றும் புராணப்படங்களில் கதாநாயகராக நடிக்கும் நடிகர் பெரும்பாலும் சிவாஜிகணேசனாகத் தான் இருக்கும்.
இவர் வீரபாண்டிய கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும், கர்ணனையும் நம் கண்முன்னே நிறுத்தியவர்.

Advertising
Advertising

வீரபாண்டிய கட்டபொம்மனில் கிஸ்தி…திரை…கப்பம்…வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்ற நீண்ட டயலாக்கில் உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி…என்று கர்ஜிப்பதை யாரால் மறக்க முடியும்? பக்திப்படங்கள் என்றால் திருவிளையாடலில் சிவபெருமானாகவே மாறியிருப்பார்.

சரஸ்வதி சபதத்தில் நாரதராகவே மாறியிருப்பார். படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளிவரும்போது சில நிமிடங்கள் நாம் அந்தப்படத்தின் கதாநாயகனாகவே மாறிப்போய் இருப்போம். இனி உங்களின் ரசனைக்குரிய அந்த சில படங்கள்…உங்களின் பார்வைக்கு.

வீரபாண்டிய கட்ட பொம்மன்

veerapandiyakattapomman Sivaji

1959ல் வெளியானது. சுதந்திரப்போராட்ட காலத்தில் நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையனுக்கு எதிராக தென்னகத்தில் இருந்து சிம்மக்குரலில் கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மனின் கதை. இந்த கேரக்டரில் நடிப்பின் இமயம் சிவாஜிகணேசன் நம்மை அவர்தம் இமலாய நடிப்பால் இருக்கையில் இருந்து எழ முடியாதவாறு கட்டிப்போட்டு விடுகிறார்.

பத்மினி, ஜெமினிகணேசன், வரலட்சுமி, ராகினி, வி.கே.ராமசாமி, ஜாவர் சீதாராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப்படத்தில் பின்னணி இசையும், பாடல்களும் அருமை. பி.ஆர்.பந்துலு இயக்கிய படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டு வெற்றிப்படமானது. இன்பம் பொங்கும் வெண்ணிலா, மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கப்பலோட்டிய தமிழன்

kappalottiya tamilan

பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப்படம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது. இந்தப்படத்தில் சுதந்திரப்போராட்ட காலத்தில் வெள்ளையனுக்கு எதிராகக் குரல் கொடுத்த பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோரும் இந்தப்படத்தில் கதாபாத்திரங்களாக வருவார்கள்.

சிவாஜிகணேசனுடன் சாவித்ரி, ஜெமினிகணேசன், எஸ்.வி.ரங்கராவ், எஸ்.ஏ.அசோகன், சாரங்கபாணி, எஸ்.வி.சுப்பையா, நாகையா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் தேசிய விருது பெற்ற படம். அதேபோல் வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படமும் இதுதான்.

தெனாலிராமன்

2014ல் வெளியான இந்தப்படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன். இமான் இசை அமைத்த படம். பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தின் கதாநாயகனாக நடித்த படம். கதாநாயகியாக மீனாட்சி தீக்சித், மனோபாலா, ராதாரவி, ஜி.எம்.குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கர்ணன்

karnan sivaji

1964ல் வெளியான படம். பி.ஆர்.பந்துலு இயக்கியுள்ளார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், தேவிகா, அசோகன், வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார்.

மகாபாரதத்தில் வரும் வீரமிக்க கதாபாத்திரமான கர்ணனின் வரலாறு தான் இந்தப்படத்தின் கதை. என் உயிர் தோழி, இரவும் நிலவும், கண்கள் எங்கே, உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

கர்ணனை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. ஆனால், சிவாஜியோ அவரைப் போலவே அச்சு அசலாக நடித்து இவர் தான் உண்மையான கர்ணன் என்று மக்கள் மனதில் நிலைத்துவிட்டார்.

மருதநாயகம்

1997ல் வெளியான இந்தப்படத்தின் கதை, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை கமல்ஹாசனே கவனித்துள்ளார். கமல்ஹாசனே இப்படத்தில் மருதநாயகமாகவும் நடித்து அசத்தியுள்ளார். உடன் விஷ்ணுவர்த்தன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக இன்று வரை உருவாகாமல் உள்ளது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் வெளியிட்டுள்ளனர்.

அதுவும் ஏராளமான செலவில் இந்தப்படத்திற்காக எடுக்கப்பட்டது. இந்தப்படத்தின் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் பங்கேற்றார். இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான இந்தப்படத்தில் இருந்து பொறந்தது பனையூரு மண்ணு என்ற பாடல் இணையதளத்தின் வாயிலாக வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
sankaran v

Recent Posts