சிவாஜியின் பச்சைவிளக்கு படத்திற்கு டைட்டில் வந்தது எப்படி? அட இப்படி கூட வைக்கலாமா?
ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றிப்படைப்பு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பச்சை விளக்கு. இந்தப்படத்திற்கு இந்த டைட்டில் வைத்தது எப்படி என்று ஏவிஎம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தை இராம.அரங்கண்ணல் உடன் சேர்ந்து ஏவிஎம் தயாரித்திருந்தது.
படத்தின் கதைப்படி பார்த்தால் சிவாஜி ஒரு என்ஜின் டிரைவர். நாகேஷ் அவரது நண்பர். இதுதான் பேசிக் கதை. இதை வைத்துப் படத்தை உருவாக்க வேண்டும்.
ரெயில்வே கேட்
படம் பாதிக்கும் மேல் எடுத்தாச்சு. ஆனால் டை;டில் முடிவாகவில்லை. நான் வழக்கமாக ஸ்டூடியோவிற்கு காரில் தான் வருவேன். அப்போது தி.நகரின் அருகே உள்ள கிருஷ்ண கான சபா அருகில் உள்ள ஒரு திருப்பத்தில் சின்னதா ஒரு ரெயில்வே கேட் உண்டு.
அந்த வழியாக ஒரு நாள் வரும்போது டக்கென்று ஒரு யோசனை தோன்றியது. நாம் எடுக்கும் படமோ என்ஜின் டிரைவர் பற்றியது. அதை ஒரு க்ளூ மாதிரி ரசிகர்களுக்கு சொல்வோமே என்று நினைத்தேன்.
அந்த ரெயில்வே கேட்டில் 3 பேனல்களை வாடகைக்கு எடுத்தோம். அங்கேயே சிவாஜி நடிக்கும் என்று போட்டு பச்சை விளக்கின் படத்தை அதன் கீழ் போட்டோம். தொடர்ந்து வருகிறது என்றும் விளம்பரம் செய்தோம்.
அந்த விளம்பரத்தை வருவோர் போவோர் என பலரும் பார்த்துவிட்டு ஏதோ சிவாஜி படம் வருகிறதாம். அதில் டிரெயின் சம்பந்தப்பட்ட படம் என்றும் பரவலாக பேச ஆரம்பித்து விட்டனர்.
கிளிக்கான...பச்சை விளக்கு
அந்த சமயத்தில் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நாங்கள் ஆலோசித்தோம். உடனே டைரக்டர் பீம்சிங் அதான் நீங்களே பச்சை விளக்கு படத்தைப் போட்டுக் காட்டிவிட்டீர்களே....அதுதான் டைட்டில் என்றார். அதன்பிறகு அதுவே தலைப்பானது.
படத்தைப் பற்றி இன்னொரு சுவாரசியம் உண்டு. சிவாஜி படத்தில் என்ஜின் டிரைவர்.
நாகேஷ் அவரது நண்பர் என பாதிப்படம் எடுத்தாச்சு அல்லவா? அதை அப்பா போட்டுப் பார்த்தார். அவருக்கு திருப்தியில்லை. உடனே எடுத்த வரை அப்படியே கட் பண்ணுங்க.
வேறு கதை ரெடி பண்ணுங்கன்னு உறுதியாகச் சொல்லிவிட்டார். வேறு வழி? அப்படியே செய்தோம். ராஜன், புஷ்பலதா கேரக்டர்களைச் சேர்த்து படத்தை முதலில் இருந்து எடுத்தோம்.
ஒளிமயமான எதிர்காலம்....
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது, கேள்வி பிறந்தது அன்று உள்பட பல இனிமையான பாடல்கள் இந்தப்படத்தில் தான் உள்ளன. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட்.
இந்தப்படத்தை இப்போது பார்த்தாலும் காட்சிக்குக் காட்சி நமக்கு ரசனையைத் தூண்டும் விதத்தில் அருமையான திரைக்கதையும், ஆழமான கதையும் கொண்டு இருப்பதை நாம் காணலாம். இந்தப்படத்தைத் தாய்மார்கள் பெரிதும் வரவேற்றனர். இப்போதும் கூட அநேக கல்யாண வீடுகளில் கிராமங்களில் என்றால் ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடல் ஒலிப்பதைக் காணலாம்.
எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. படம் வெளியான நாள் 3.4.1964