களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல் நடிக்கக் காரணமே இவர் தான்...! யார் அவர்?
களத்தூர் கண்ணம்மாவில் கமல் நடித்தது சுவாரசியமான விஷயம். அவர் எப்படி அந்தப்படத்தில் அறிமுகமானார் என்பதை இங்கு பார்ப்போம்.
ஏவிஎம் நிறுவனத்தின் மாபெரும் வெற்றிப் படைப்புகளில் ஒன்று களத்தூர் கண்ணம்மா. ஜெமினிகணேசன், சாவித்திரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்தப்படத்தில் ஒரு சிறு பையனின் வேடத்திற்கு முதலில் டெய்சி ராணியைத் தான் புக் செய்திருந்தனர்.
யார் பையன் படத்தில் நடித்து புகழ்பெற்ற சிறுமி. களத்தூர் கண்ணம்மாவிற்கு அவருக்கு சம்பளம் பத்தாயிரம் ரூபாய். அப்போதே அந்தத் தொகை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அட்வான்ஸாக ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டு விட்டது.
அந்த சமயத்தில் ஒருநாள் ஏவி. மெய்யப்ப செட்டியாரின் மனைவியைப் பார்க்க டாக்டர் சாரா ராமச்சந்திரன் வந்திருந்தார். இது போல அவர் அடிக்கடி வருவதுண்டு.
அன்றைய தினம் வந்தபோது கூடவே ஒரு சிறுவனையும் அழைத்து வந்திருந்தார். அந்தப் பையன் அப்போது வெளியே கால் முட்டியைக் கட்டிக்கொண்டு உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அதைப் பார்த்ததும் யார் அந்தப் பையன் என செட்டியாரின் மனைவி கேட்க, தெரிஞ்ச பையன்.
நான் இங்கே வரேன்னு தெரிஞ்சதும்...நானும் வருவேன்னு அடம்பிடித்தான். அவனுக்கு செட்டியாரைப் பார்க்கணும்னு ஆசை. நடிக்கவும் ஆசைப்படுறான்...நான் அவனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று தான் இப்படி உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு இருக்கான் என்றார் டாக்டர் சாரா.
பாடல்களைப் பாடி அசத்திய சிறுவன் கமல்
பிறகு அந்த சிறுவன் சில பாடல்களைப் பாடிக்காட்டி தனது சினிமா ஆசையை வெளிப்படுத்தினான். அந்தப் பையனை செட்டியாரிடம் அறிமுகப்படுத்துகையில் யாரப்பா இது என்று கேட்டார். இந்தியில் பிரபலமான சஸ்திகா நாம் காடி படத்தில் உள்ள பாடல்களை எல்லாம் பாடிக் காட்டினான் என்றார் செட்டியாரின் மகன் சரவணன்.
உடனே அவர் உனக்கு டெய்சி ராணியைப் போல நடிக்கத் தெரியுமா என்று கேட்டார். முடியும் என்பது போல தலையை ஆட்டினான் அந்த சிறுவன். உடனே அவனை புக் பண்ணச் செய்தார் செட்டியார். அந்த சிறுவன் வேறு யாருமல்ல. பின்னாளில் விஸ்வரூபமெடுத்த கலைஞானி கமல்ஹாசன் தான்.
ஐயய்ய...இது டூப் மாங்கா...
கமல் நடிக்கும் முன் படப்பிடிப்பில் பார்த்த முதல் காட்சி என்னன்னா, கண்களின் வார்த்தைகள் புரியாதோ என்ற பாடல் தான். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் டூப் மாங்காய் தொங்க, அதை சிறுவன் ஆசையாய் ஜெமினிகணேசனிடம் அங்கிள் அதைப் பறிச்சிக் கொடுங்க என கேட்டான். அவரும் அதைக் கொடுக்க வாயில் வைத்த சிறுவன் ஐயய்ய...இது டூப் மாங்கா என விட்டெறிந்தான்.
அதே போல் வீடு செட்டிங்கைப் பார்த்தான். ஐயய்ய இது டூப் வீடு என்றான். அதே போல சாவித்திரி ஒருநாள் கமலுக்கு உப்புமா ஊட்டி விடுகிற சீன் எடுக்கப்பட்டது. வாயில் வைத்ததும் கமல் ஐயய்ய இது டூப் உப்புமா என துப்பி விட்டார்.
அதன்பின்னர் உதவி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சாப்பிட்டுக் காட்டினார். அதன்பிறகே அது ஒரிஜினல் உப்புமா என கமல் சாப்பிட்டார்.
திடீரென கமல் சூட்டிங்கின் போது காணாமல் போய்விடுவாராம். அவரைத் தேடி அலைந்தால் செட்டியாரின் அருகில் ஜாலியாக உட்கார்ந்திருப்பாராம். மற்றொரு முறை தேடினால் அவர் கொய்யாமரத்தில் உட்கார்ந்து ஜாலியாக கொய்யா பறித்துக் கொண்டு இருப்பாராம். அவர் விளையாடிய மரம் என்பதற்காக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கமல் பாடிய அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் வெறும் ஒன்றரை நிமிடத்திற்குத் தான் முதலில் படமாக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்த செட்டியார் அதை 3 நிமிடமாக நீட்டுங்கப்பா...அப்பத் தான் அந்தப் பையன் எஸ்டாப்ளிஷ் ஆவான் என கூற உடனே பாடலை 3 நிமிடமாக மாற்றினார்களாம்.