எம்ஜிஆர் புரட்சித்தலைவர் ஆனது எப்படி? நிருபரின் எடக்கு கேள்விக்கு மக்கள் திலகத்தின் நெத்தி அடி பதில்

by sankaran v |   ( Updated:2023-03-19 17:05:10  )
எம்ஜிஆர் புரட்சித்தலைவர் ஆனது எப்படி? நிருபரின் எடக்கு கேள்விக்கு மக்கள் திலகத்தின் நெத்தி அடி பதில்
X

MGR

எம்ஜிஆர் தமிழ்த்திரை உலகில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர். இவரது ஆளுமைத்திறன் அபாரமானது. ஏழைகளுக்கு ஒரு துன்பம் வந்தால் ஓடோடி வந்து உதவுவார். இது படத்தில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் தான்.

எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகியதும் புதிய கட்சியைத் தொடங்கலாமா என மக்கள் கருத்தைக் கேட்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது யாரும் செய்யாத ஒரு வரலாற்று நிகழ்வு. எல்லோரும் புது கட்சியைத் தொடங்கி விட்டு மக்களை சந்திப்பார்கள். ஆனால் எம்ஜிஆர் தொடங்கலாமா என கருத்து கேட்கவே மக்களை சந்தித்தார் என்றால் அவரது பெருந்தன்மை எத்தகையது?!

MGR and Kalaignar

அதன்படி, அக்.17, 1972ல் புதுகட்சியைத் தொடங்கினார். தனது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார். இந்தக் கட்சிக்கு அண்ணாவின் பெயரை சூட்டியதும் ரசிகர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் கட்சிக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்று பல பெயர்கள் உண்டு. மக்கள் திலகம் என்று முதன் முதலில் வழங்கியவர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன். புரட்சி நடிகர் என்று அவரை அழைத்தவர் கலைஞர் கருணாநிதி.

பொன்மனச் செம்மல் என்ற பெயரை வழங்கியவர் திருமுருக கிருபானந்த வாரியார். ஆனால் புரட்சி நடிகர் என்று இருந்த எம்ஜிஆரை புரட்சித்தலைவர் என்று அழைத்தவர் தென்னகம் ஆசிரியரும், அதிமுகவின் முதல் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான கே.ஏ.கிருஷ்ணசாமி தான்.

1972ல் நவ.3ம் நாளன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில் அதிமுகவின் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கே.ஏ.கிருஷ்ணசாமி பேசுகையில், இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே அழைத்தோம்.

MGR 3

இனிமேல் அவர் புரட்சிநடிகர் அல்ல. புரட்சித் தலைவர். ஊழலை ஒழித்துக் கட்டும் தர்மயுகத்தின் தானைத்தலைவர். இனிமேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே அழைக்க வேண்டும் என்றார். அப்போது வானுயர புரட்சித்தலைவர் வாழ்க என்ற கோஷம் எழுந்தது.

எம்ஜிஆரை மடக்கும் வகையில் பத்திரிகை நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். கலைத்துறையில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு உங்கள் கழக அரசியல் செல்வாக்குத் தானே காரணம் என்று கேட்டார். அதற்கு எம்ஜிஆர் அளித்த பதில் தான் சுவாரசியம். கேள்வி கேட்ட நிருபர் முகத்தைத் தொங்கப் போட்டார்.

நான் ராஜகுமாரி படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த 1947ல் திமுக தோன்றவே இல்லை. இருந்தும் அந்த நேரத்தில் ஜெமினி நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளியானது சந்திரலேகா.

அந்தப் படத்தின் வசூலுக்கு அடுத்தப்படியாக வந்து சாதனை படைத்தது ராஜகுமாரி. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார். நிருபரின் முகத்தில் அசடு வழிந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எம்ஜிஆரால் கழகம் தான் வளர்ந்தது. இந்த உண்மையை நன்கு உணர்ந்தவர் அறிஞர் அண்ணா.

Next Story