விசு படங்களில் குடும்பக்கதை எப்படி வெற்றி பெறுகிறது?

by sankaran v |
விசு படங்களில் குடும்பக்கதை எப்படி வெற்றி பெறுகிறது?
X

Director Visu

தமிழ்சினிமா இயக்குனர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். ஒருவர் கிராமிய படம் என்றால் திகட்ட திகட்ட தித்திப்பு என்ற அளவில் ஆர்வம் பொங்க எடுப்பார். அவர் தான் பாரதிராஜா. ஒருவர் முற்போக்கு சிந்தனையாளர்.

இவரது படங்களில் தொலைநோக்குப் பார்வை தென்படும். இன்னும் 25 ஆண்டுகள் கழித்து நடக்க இருக்கும் விஷயத்தை இப்போதே சொல்லி விடுவார் என்ற அளவில் இவரது படங்கள் புதுமையாக இருக்கும். இவர் தான் கே.பாலசந்தர்.

இன்னும் இருட்டை மட்டும் நேசித்து இருளில் ஒரு ஒளிக்கீற்றாய் வண்ணங்களை கலந்து நமக்கு ஒளிப்பதிவாய் தந்து உயிரோட்டமாய் திரைக்கதையை அமைத்து புத்துணர்வுடன் நமக்கு தருபவர் மணிரத்னம். இன்னொரு இயக்குனர் படங்கள் எல்லாமே அதிரடி தான். ஊர்ப்பெயர்களையேக் கொண்டு டைட்டில் வைப்பார்.

இவர் யார் என்றால் பேரரசு. இப்படி ஒவ்வொரு இயக்குனருக்கும் தனித்திறமைகள் என்று உண்டு. அந்த வகையில் இந்த இயக்குனருக்கு குடும்பப்பிரச்சனைகள் என்றால் அல்வா சாப்பிட்டது மாதிரி. அதிலும் கூட்டுக்குடும்ப கதைகளையே மையமாகக் கொண்டு பல படங்களை எடுத்திருப்பார். பிரச்சனைகளை அக்குவேறு ஆணிவேறாக எடுத்து அலசி ஆராய்ந்து எது சரி எது தவறு என தீர்ப்பு சொல்வதில் வல்லவர். இவரது படங்கள் தாய்மார்கள் மத்தியில் அதிகம் பேசப்படும். படங்களும் வெற்றி அடையும்.

இவரது படங்கள் வெற்றி அடைய காரணமே இவர் எடுத்துக் கையாண்ட பிரச்சனைகள் தான். உதாரணத்திற்கு வரதட்சணைக் கொடுமையைப் பற்றி நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொன்ன படம் டௌரி கல்யாணம்.

இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் லாவகமாய் கையாண்டு வெற்றிப்படைப்பாக்கினார் விசு. இந்தப்படத்தில் விசுவுடன் இணைந்து விஜயகாந்த், எஸ்.வி.சேகர், ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.

samsaram athu minsaram

அதேபோல் 1986ல் இவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சம்சாரம் அது மின்சாரம். இந்தப்படத்தின் வசனம் கூட அன்றைய கால கட்டத்தில் விழாக்காலங்களில் ஒலிப்பெருக்கிகளில் ஒலிக்காத பட்டி தொட்டிகளே இல்லை எனலாம்.

ஒவ்வொரு வசனமும் சுருக்கென்று குத்தும் அளவு கூர்மையானவை. இந்தப்படத்தை எடுத்துக்கொண்டால் கூட்டுக்குடும்ப பிரச்சனைகள் தான் கதை. அருமையான படம்.

அனைத்துத் தரப்பு மக்களும் அவசியம் காண வேண்டிய படம் இது என்று சொன்னால் மிகையில்லை. விசுவுடன் லட்சுமி, சந்திரசேகர், ரகுவரன், மனோரமா, டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். வெள்ளிவிழா கண்ட வெற்றிப்படம் இது.

manal kayiru

1982ல் வெளியான படம் மணல் கயிறு. விசு, மனோரமா, எஸ்.வி.சேகர் உள்பட பலர் நடித்துள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி வாகை சூடியது. எஸ்.வி.சேகர் படத்தில் தனக்கு வரவேண்டிய மணப்பெண் 8 நிபந்தனைகளுக்கு ஒத்து வர வேண்டும் என்று கண்டிஷன் போடுவார்.

அதன்படி அவர் போடும் ஒவ்வொரு நிபந்தனைகளுமே சுவாரசியமானவை. உதாரணத்திற்கு ஒன்று. காலேஜ் போய் படித்து இருக்க வேண்டும். ஆனால் டிகிரி வாங்கியிருக்கக் கூடாது. இவரை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று விசு வித்தியாசமாக முயற்சி செய்வார். அதில் வெற்றி பெற்றாரா என்பது தான் கதை.

பெண்மணி அவள் கண்மணி என்ற படத்தை 1988ல் விசு இயக்கினார். பிரதாப் போத்தன், சீதா, கிஷ்மு ஆகியோருடன் இணைந்து நடித்து படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பெண்ணின் பெருமையைப் பற்றி உலகிற்கு உரக்கச் சொன்ன படம் இது.

1989ல் வெளியான படம் சகலகலா சம்பந்தி. இந்தப்படமும் குடும்பக்கதையை மையமாகக் கொண்டதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது. விசுவுடன், ரஞ்சனி, சரண்யா, திலீப், பாண்டியன், மாதுரி, குட்டி பத்மினி, டெல்லி கணேஷ், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர்.

sakalakala sambanthi

100 நாள்களைக் கடந்து வெற்றி பெற்ற படம் இது. விதவைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க இந்தப்படத்தில் சம்பந்தியாக வரும் விசு செய்யும் முயற்சி தான் படத்தின் கதை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும். அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு வித்திட்டது. இந்தப்படத்தை கே.பாலசந்தர் தயாரித்துள்ளார்.

1985ல் சிதம்பர ரகசியம் என்ற படத்தை விசு இயக்கினார். விசுவுடன் இணைந்து எஸ்.வி.சேகர், டெல்லிகணேஷ், அருண்பாண்டியன், இளவரசி, மனோரமா, காந்திமதி, கிஷ்மு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் தான் வித்தியாசமான விசுவைப் பார்க்க முடியும். கதையே நகைச்சுவையும், த்ரில்லரும் கலந்த மசாலாப்படமாக இருக்கும். ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று.

Next Story