எம்.ஜி.ஆரை மொத்தமாக மாற்றிய ரயில் பயணம்!… அதுக்கு அப்புறம்தான் அவர் மக்கள் தலைவர்!…
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடிக்க துவங்கி சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறி தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதோடு, தமிழ் சினிமாவின் ஆளுமையான நடிகராகவும் மாறினார். மற்ற நடிகர்களோடு ஒப்பிடுகையில் தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் தயக்கமின்றி எம்.ஜி.ஆர் பழகுவார்.
அவரை பார்க்க அவரின் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பார். புகைப்படம் எடுத்து கொள்வார். எல்லோருக்கும் விருந்து வைத்து அனுப்பி வைப்பார். ஆனால், சினிமாவில் நடிக்க துவங்கி ஓரளவுக்கு பிரபலமான நிலையில் எம்.ஜி.ஆர் அப்படி இருந்தது இல்லை. அவர் ரசிகர்களையும், மக்களையும் சந்திக்க தயங்கினார். அவரை ஒரு சம்பவம்தான் மொத்தமாக மாற்றியது.
எம்.ஜி.ஆர். தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து ஓரளவுக்கு மக்களிடம் பிரபலமாகி கொண்டிருந்த காலம் அது. கோவையிலிருந்து கேரளா செல்லும் ரயிலில் 3ம் வகுப்பில் பயணித்தார். எம்.ஜி.ஆர் அப்போது பகதாவர் கெட்டப்பில் இருந்தார். வெள்ளை துண்டால் தனது பகவாதர் கெட்டப்பை மூடியபடி கட்டிக்கொண்டார். தன்னை யாரும் அடையாளம் கண்டு பிடிக்கக்கூடாது என்பதற்காக முகத்தை முழங்காலில் பாதி மறைத்தபடி அமர்ந்திருந்தார்.
இரண்டு ஸ்டேஷன் ரயில் சென்றதும் அதே பெட்டியில் அப்போது கர்நாடக சங்கீத மேதை செம்பை வைத்தியநாதன் பகவாதர் ஏறினார். அவர் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு ‘உங்களை பார்த்தால் சினிமா உலகை சேர்ந்தவர் போல் தெரிகிறதே’ என சொல்ல, எம்.ஜி.ஆரும் ‘ஆம். நான் ஒரு நடிகர்’ என அறிமுகம் செய்து கொண்டார். உடனே செம்பை வைத்திநாதன் .
‘அப்படியெனில் தலை நிமிர்ந்து ஜம்மெனெ உட்காருங்கள். ஏன் முகத்தை மூடி மறைத்துள்ளீர்கள். ரசிகர்கள் பலரும் இந்த ரயிலில் வருவார்கள். அவர்களிடம் தயக்கமின்றி பேசுங்கள். அது அவர்களையும் சந்தோஷப்படுத்தும். மக்களை சந்திக்க தயங்க வேண்டாம்’ என சொல்ல அன்று முதல் எம்.ஜி.ஆர் தன்னை மாற்றிக்கொண்டார். எங்கு சென்றாலும் ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் தயக்கமின்றி பேச தன்னை தயார்படுத்திக்கொண்டார். அதுதான் அவரை மக்கள தலைவராகவும் மாற்றியது.