Cinema History
நூறாவது நாள் பட வாய்ப்பு சத்யராஜூக்குக் கிடைத்தது எப்படி தெரியுமா?
இயக்குநர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அந்தப் படத்தில் சத்யராஜ் நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா… பின்னர் எப்படி சத்யராஜ் உள்ளே வந்தார்?
இயக்குநர் மணிவண்ணன் கரியரில் ஆரம்ப காலகட்டங்களில் வெளியான முக்கியமான படம் நூறாவது நாள். திரில்லர் படமான இதில், மோகன், விஜயகாந்த், சத்யராஜ், நளினி, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். 1984-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அத்தோடு, மொட்டைத் தலை, கூலிங் கிளாஸ் சகிதம் நெகடிவ் ஷேடில் நடித்த சத்யராஜூக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய ஓபனிங்கைக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
நூறாவது நாள் வில்லன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பழம்பெரும் இயக்குநர் கே.விஜயனாம். இயக்குநர் மணிவண்ணன் அவரிடம் பேசி கிட்டத்தட்ட அந்த ரோலுக்கு அவரைத் தயார் செய்திருந்தார். படத்தின் பெரும்பாலான பகுதி இரவு நேரத்திலும் மழை எஃபெக்டிலும் எடுக்க வேண்டியது இருந்தது. அதேபோல், நெகடிவ் கேரக்டரில் நடிக்கும் நபர், பைப் சிகரெட்டை வைத்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
இதுபற்றியெல்லாம் தெரிந்துகொண்ட விஜயன், ஆஸ்துமா காரணத்தைச் சொல்லி அந்தப் படத்தில் நடிப்பதைக் கடைசி நேரத்தில் தவிர்த்திருக்கிறார். இதனால், அவருக்கு மாற்றாக நடிகர் கே.பாலாஜியை நடிக்க வைக்க படக்குழுவினர் அணுகியிருக்கிறார்கள். அவரும் அதே பிரச்சனையைக் காரணம் காட்டி நடிக்க மறுத்துவிட்டாராம்.
அப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் சிபாரில் இயக்குநர் மணிவண்ணனுடன் கதை இலாகாவில் பயணிக்கும் நோக்கில் டிஸ்கஷன்களில் சத்யராஜ் கலந்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அவருக்கு நடிகராக வேண்டும் என்கிற ஆசை துளியும் இல்லையாம். கதை இலாகாவில் பயணித்து ஒரு கதாசிரியராக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்திருக்கிறது. அப்படி, இயக்குநர் மணிவண்ணனிடம் ஒரு கதையையும் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை பின்னாட்களில் தெலுங்கில் படமானது குறிப்பிடத்தக்கது.
சரி, நூறாவது நாள் கதைக்கு வருவோம். நெகடிவ் கேரக்டரில் நடிக்க படக்குழுவினர் அணுகிய இரண்டு பேருமே மறுத்துவிட்ட நிலையில், ஸ்டோரி டிஸ்கஷனுக்கு வந்த சத்யராஜை நடிக்க வைக்கலாமா என்கிற எண்ணம் எழுந்திருக்கிறது. இதையடுத்து, தி.நகரில் இருக்கும் நடிகர்களுக்குப் பிரபலமான சலூனுக்கு அவரை அழைத்துச் சென்று மொட்டை போட்டிருக்கிறார்கள். பின்னர், பிரபல போட்டோகிராஃபரான ஸ்டில்ஸ் ரவியை வைத்து சத்யராஜ் கையில் விலங்கை எல்லாம் கொடுத்து போட்டோக்கள் எடுத்திருக்கிறார்கள். அந்த கேரக்டருக்கு சத்யராஜ் சிறப்பாக இருப்பார் என்று படக்குழுவினர் நம்பினர்.
அந்த நம்பிக்கையை சத்யராஜ் சிறப்பாகவே காப்பாற்றினார். நூறாவது நாள் சமயத்தில் நடிகர் மோகன் பிரபலமான நடிகராக இருந்தார். விஜயகாந்த் அப்போது தான் வளர்ந்து வந்த நடிகர். இதனால், மோகனுக்காக விஜயகாந்த் பல நாட்கள் காத்திருப்பாராம். தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து தனக்கு காட்சிகள் இருக்கிறதா என்பதை உதவி இயக்குநர்களிடம் விசாரித்துக் கொண்டே இருப்பாராம். ஒரு கட்டத்தில் அவருக்கு சண்டை காட்சிகளை வைக்கலாம் என்றெண்ணி படத்தில் ஃபைட் சீன்கள் வைத்திருக்கிறார்கள். நூறாவது நாள் படம் சத்யராஜ் மட்டுமல்ல, விஜயகாந்த் கரியரிலும் முக்கியமான படமாக அமைந்தது.