இந்த எம்.ஜி.ஆர் படத்துக்கு இவ்வளவு தடங்கல் வந்ததா?? என்னப்பா சொல்றீங்க??
1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நான் ஆணையிட்டால்”. இத்திரைப்படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆரின் மிக நெருங்கிய நண்பராக திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பன், இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு ஆர்.எம்.வீரப்பனும், இயக்குனர் சாணக்யாவும், இத்திரைப்படத்தின் கதையை கூற, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் சென்றார்களாம். அங்கே அவர்கள் கூறிய கதையை கேட்ட எம்.ஜி.ஆருக்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போனதாம். மேலும் அவர்கள் இத்திரைப்படத்தில் சரோஜா தேவியை கதாநாயகியாக போடலாம் என எம்.ஜி.ஆரிடம் கேட்க, அவரும் சரி என்று கூறிவிட்டாராம்.
ஆனால் அதன் பின் ஒரு நாள் “நான் ஆணையிட்டால்” திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிப்பதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளிவந்திருக்கிறது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்.எம்.வீரப்பன் “எம்.ஜி.ஆர்தான் இவ்வாறான தகவலை பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கவேண்டும்” என மனதில் நினைத்துக்கொண்டாராம். நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை கூறினாராம்.
அதற்கு எம்.ஜி.ஆர், “ஜெயலலிதா நல்ல நடிகைதானே. அவரையே ஹீரோயினாக நடிக்க வைக்கலாமே” என கூற, அதற்கு ஆர்.எம்.வீரப்பன், “இல்லை, இந்த படத்தில் கதாநாயகி கதாப்பாத்திரத்திற்கு சரோஜா தேவிதான் பொருத்தமாக இருப்பார்” என கூறினாராம். ஆனால் எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவின் பெயரையே கூறிக்கொண்டிருந்தாராம்.
அதன் பிறகுதான் சரோஜா தேவிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏதோ கருத்து மோதல் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. உடனே இருவரையும் அழைத்து அந்த கருத்து மோதலை விசாரித்து தீர்த்தும் வைத்திருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.
1965 ஆம் ஆண்டு தீபாவளி அன்று “நான் ஆணையிட்டால்” திரைப்படத்தை வெளியிடலாம் என்ற திட்டத்தில் இருந்தாராம் ஆர்.எம்.வீரப்பன். ஆனால் சில காரணங்களால் தீபாவளிக்கு அத்திரைப்படத்தை வெளியிடமுடியவில்லையாம். ஆதலால் 1966 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட்டுவிடலாம் என முடிவு செய்தாராம் ஆர்.எம்.வீரப்பன்.
இதனிடையே ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் “அன்பே வா” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் எம்.ஜி.ஆர். “அன்பே வா” திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என ஏவிஎம் நிறுவனத்தார் முடிவெடுத்திருந்தார்களாம். ஆர்.எம்.வீரப்பன் ஏவிஎம் நிறுவத்தின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால் பொங்கலுக்குப் பிறகு “நான் ஆணையிட்டால்” திரைப்படத்தை வெளியிட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்தாராம்.
ஆனால் “அன்பே வா” திரைப்படத்திற்கு பிறகு, சின்னப்பா தேவர் தயாரிப்பில் “முகராசி” என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்தாராம். “முகராசி” திரைப்படத்தை 1966 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட முடிவு செய்திருந்தார்களாம். இதனை கேள்விப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அதிர்ச்சியடைந்தாராம்.
உடனே எம்.ஜி.ஆரை பார்க்க ஓடிய ஆர்.எம்.வீரப்பன் “நான் ஆணையிட்டால் படத்தை பிப்ரவரியில் வெளியிட்டு விடலாம் என நினைத்தேன். ஆனால் நீங்களோ சின்னப்பா தேவருக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டீர்கள். என்னுடைய படமோ தள்ளிக்கொண்டே செல்கிறது” என வேதனைப்பட்டாராம். உடனே எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பனை கட்டியணைத்து, “நான் ஆணையிட்டால் திரைப்படத்தை பிப்ரவரியிலே வெளியிட்டுவிடலாம். கவலை படாதீர்கள்” என கூறி அவரை தேற்றினாராம்.
எனினும் “நான் ஆணையிட்டால்” படத்திற்கு இன்னொரு தடங்கலும் வந்தது. அதாவது அத்திரைப்படத்திற்காக எழுதப்பட்ட கிளைமேக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை. ஆதலால் எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றச்சொன்னார். ஆனால் கிளைமேக்ஸ் காட்சியை மாற்ற ஆர்.எம்.வீரப்பனுக்கு விருப்பம் இல்லை. ஆதலால் இயக்குனர் சாணக்யாவிடம் “நீங்களே கிளைமேக்ஸ் காட்சியை முடிவு செய்துகொள்ளுங்கள்” என கூறிவிட்டனராம்.
“அன்பே வா” திரைப்படம் வெளியான மூன்றாவது வாரத்தில் “நான் ஆணையிட்டால்” திரைப்படம் வெளியானது. ஆனால் அத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. மேலும் எம்.ஜி.ஆர், சின்னப்பா தேவர் தயாரிப்பில் நடித்துக்கொண்டிருந்த “முகராசி” திரைப்படம் “நான் ஆணையிட்டால்” திரைப்படம் வெளியான அடுத்த இரண்டு வாரங்களில் வெளியானது.
“கிளைமேக்ஸை மாற்றியதால்தான் படம் ஓடவில்லை” என எம்.ஜி.ஆரிடம் வாக்குவாதம் செய்தாராம் ஆர்.எம்.வீரப்பன். ஆனால் எம்.ஜி.ஆரோ “படம் ஓடாததற்கு கிளைமேக்ஸ் மாற்றியது காரணம் இல்லை. அன்பே வா, முகராசி ஆகிய திரைப்படங்களுக்கு நடுவே, நான் ஆணையிட்டால் வெளிவந்ததுதான் காரணம்” என கூறினாராம்.