தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு சென்ற போது அவரைக் காண பல ஊர்களில் இருந்தும் மக்கள் கூடியதாலும் மதியம் 12:30 மணிக்கே வந்து விடுவதாக சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு வந்தாலும் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கமடைந்து உயிரையும் இழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த பல நாட்களாக சிபிஐ அதிகாரி விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. ஏற்கனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார். மேலும், விஜய்க்கும் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து கடந்த 13ஆம் தேதி விசாரணை நடத்தினார்கள்.
தற்போது இரண்டாவது நாளாக இன்று காலை டெல்லியில் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். அப்போது அவரிடம் பல அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ எழுப்பியதாக தெரிகிறது.
குறிப்பாக அவ்வளவு கூட்டம் இருப்பதை நீங்கள் பார்த்தீர்களா? கூட்ட நெரிசலை எப்போது உணர்ந்தீர்கள்? அவ்வளவு பேர் நிற்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அவ்வளவு கூட்டம் அங்கே இருந்தும் வாகனத்தை ஏன் கூட்டத்திற்குள் கொண்டு போனீர்கள்?.. அபாயத்தை எப்போது உணர்ந்தீர்கள்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை விஜயிடம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது தமிழக போலீசார் வழிநடத்திலேயே நான் அங்கு சென்றேன்.. அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் பின்பற்றினோம்.. தமிழக காவல்துறையை நம்பினேன் என்று விஜய் சொன்னதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.
கரூர் சம்பவம் நடந்தபோது நாங்கள் சொன்ன எந்த எந்த விஷயத்தையும் தவெக நிர்வாகிகள் பின்பற்றவில்லை என கரூர் போலீசார் குற்றம் சொன்னது குறிப்பிடத்தக்கது.




