எம்ஜிஆருடைய படங்களுக்கு அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த காமெடி நடிகர் வாழ்வில் நடந்த நெஞ்சைப் பிழியும் சோகம்...!
சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் இடிச்சப்புளி செல்வராஜ். 500க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் இவர் அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய காமெடி அனைத்தும் யதார்த்தமானவை. மனோரமா, கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிக்க வைப்பவை. இவர் நடிகர் பாண்டுவின் அண்ணன். அவரது சோகத்தைப் பிழிந்த ஒரு சம்பவத்தை இப்படி பகிர்கிறார்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திற்கு நான் தான் அசிஸ்டண்ட் டைரக்டர். படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் நடத்துவதாகத் திட்டமிட்டு எல்லோரும் ஜெய்ப்பூருக்குப் போனோம். படப்பிடிப்பின்போது எனக்கு சென்னையில் இருந்து என் அண்ணன் போனில் பேசினார். அப்பா இறந்து போனார்.
உடனடியாக வரவேண்டும் என்று சொல்லி போனை வைத்து விட்டார். போனை எடுத்தது ஆபீஸ் பையன். அவனுக்கு என்னிடம் நேரடியாக சொல்ல முடியவில்லை. மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் போய் சொல்லிவிட்டான். படத்தின் ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் அவர் தான்.
அவரும் என்னிடம் நேரடியாக சொல்ல சங்கடப்பட்டு கொஞ்சநேரம் தயங்கி தயங்கி என்னிடம் சொன்னார். மறுவினாடியே எனக்கு பயங்கர அதிர்ச்சி. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நாங்கள் இருப்பதோ ஜெய்ப்பூர். உடனடியாக சென்னை போக வேண்டும். இது ரொம்பவே சிரமம். ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு பிளைட் பிடித்து, டெல்லியில் இருந்து சென்னைக்கு நான் வருவதற்குள் எல்லா காரியங்களும் முடிந்து விட்டது.
நான் ஜெய்ப்பூர் போகும்போது பூவோடும், பொட்டோடும் பார்த்த என் அன்னை நான் திரும்ப வரும்போது வெள்ளை சேலையில் பார்க்க நேர்ந்ததில் மனம் வேதனை. இத்தனை பிளைட் பிடித்துப் போயும் என் அப்பாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற சோகம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு படத்தில் கிரேசிமோகன், கவுண்டமணி, செந்தில், கோவைசரளாவுடன் காது கேளாதவர் போல நடித்துக் கலக்கியிருப்பார் இடிச்சப்புளி செல்வராஜ். இந்தக்காட்சியைப் பார்க்கும் போது வயிறு குலுங்க சிரிக்கலாம். இதில் இடிச்சப்புளி செல்வராஜை வச்சி செய்து விடுவார் கவுண்டமணி. அவரின் நையாண்டியும் நக்கலும் தூக்கலாக இருக்கும். அதில் ஒரு கட்டத்தில் இடிச்சப்புளி செல்வராஜ், நீங்க என்ன பண்ணுவீங்களோ...ஏது பண்ணுவீங்களோ தெரியாது...
என் பொண்ணு கல்யாண கெட்டி மேள சத்தத்தை இந்தக்காதால கேட்கணும்னு சொல்வாரு. அப்போ கவுண்டமணி...கிழிஞ்சது..இந்தக்காதை வைச்சிக்கிட்டு நடக்கிற கதையாடா...ஒண்ணு செய்யலாம்...கல்யாணத்துக்கு வர்ற நாதஸ்வரக் கச்சேரிக்காரங்கள மேடை மேல உட்கார விடாம உன் காது மேல உட்கார வச்சி அந்தக் குழாய எடுத்து உன் காதுக்குள்ள விட்டு குடாயலாம்.
ஐயோ....இவனை வச்சிக்கிட்டு நான் எப்படித் தான் சமாளிக்கப்போறேனோ தெரியலயே...! என்று சொல்லும் கவுண்டமணி இந்தப்படத்தில் சக்கை போடு போடுவார். அவர் காதுகேட்காத கோவை சரளாவுக்கு அவரைப்பற்றி சொல்லாமல் செந்திலுக்கு கல்யாணம் செய்து முடிக்க முயற்சி செய்வார்.