வா வந்து ஏறிக்கோ- இளையராஜாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்த இயக்குனர்... ஏன் தெரியுமா?
மூன்று தலைமுறையாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருப்பவர் இளையராஜா. “அன்னக்கிளி” திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான பிறகு இளையராஜாவின் காட்டில் மழைதான். அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஒரே நாளில் நான்கு படங்களுக்கு இசையமைக்கும் நிலை வந்தது. யாரும் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத படி பிசியான இசையமைப்பாளராக இருந்தார் இளையராஜா.
இளையராஜாவிற்கு இப்போது வயதானாலும் அவரது இசை இளமையாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியான “விடுதலை” திரைப்படத்தில் மிகச் சிறப்பாக இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் “ராஜான்னா ராஜாதான்” என்று ரசிகர்களை சொல்ல வைத்தது.
இந்த நிலையில் இளையராஜா உச்சத்தில் இருந்த சமயத்தில் அவரை ஒரு இயக்குனர் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஸ்டூடியோவுக்கு கூப்பிட்டு வந்திருக்கிறார். அவர் யார்? ஏன் இப்படி செய்தார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
“பயணங்கள் முடிவதில்லை”, “மெல்ல திறந்தது கதவு”, “ராஜாதி ராஜா”, “திருமதி பழனிச்சாமி” உட்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரது நகைச்சுவை காட்சிகள் மிக பிரபலமானவை. ரோட்டில் போறவரிடம் ஒரு காகிதத்தை கொடுத்து, “அதுல ஒன்னும் இல்லை கீழ போட்டுரு” என்று சொல்லும் காமெடி காட்சி இப்போதும் மீம் டெம்ப்ளேட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் இயக்கியிருந்த ஒரு திரைப்படத்தின் ரீரெகார்டிங்கிற்கு இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு செல்ல வேண்டியது இருந்ததாம். அப்போது அவரது கார் பஞ்சராகிவிட்டது. எனினும் எந்த தயக்கமும் இல்லாமல் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாராம்.
அப்போது வழியில் இளையராஜாவின் கார் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்ததாம். அதை பார்த்ததும் அதன் அருகில் சென்று “என்னாச்சு?” என கேட்டிருக்கிறார். அதற்கு இளையராஜா “கார் ஸ்டார்ட் ஆகவில்லை. திடீரென்று நின்றுவிட்டது” என கூறியிருக்கிறார்.
உடனே “என் சைக்கிளில் ஏறிக்கோங்க. நான் டபுள்ஸ் ஓட்டுறேன்” என சுந்தர்ராஜன் கூற, உடனே இளையராஜாவும் எந்த தயக்கமும் இல்லாமல் ஏறிக்கொண்டாராம். அதன் பின் இருவரும் சைக்கிளிலேயே ஸ்டூடியோவிற்கு சென்றிருக்கின்றனர்.