இளையராஜா சொன்ன அட்வைஸ்… பாடகர் மனோ வாழ்க்கையில் நிகழ்ந்த மேஜிக்… அடடா!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, துலு போன்ற மொழிகளில் 24,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் மனோ. இவரது குரலுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலுக்கும் அவ்வளவு எளிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது என ரசிகர்கள் பலரும் கூறுவார்கள். இவர் ஒரு பாடகர் மட்டும் அல்லாது ஒரு டப்பிங் கலைஞரும் கூட. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் போன்ற டாப் நடிகர்களின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
அதே போல் மனோ ஒரு சிறந்த நடிகரும் கூட. தமிழில் “சிங்காரவேலன்”, “வெற்றிச்செல்வன்”, “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை விட தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மனோ. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு மனோ அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய பெயர் காரணம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.
அதாவது மனோவின் உண்மையான பெயர் நாகூர் சாகிப். இவரை இளையராஜா, பாடகராக அறிமுகப்படுத்தியபோது இவரது பெயரை மாற்றச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே நாகூர் ஹனிஃபா என்ற பிரபல பாடகர் இருந்ததால் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அதற்கு மனோ, “என்னை அறிமுகப்படுத்துவது நீங்கள்தான். நீங்களே ஒரு பெயரை கூறுங்கள்” என கூறியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் பாடகி சித்ராவும் சினிமா உலகில் அறிமுகமான சமயம் என்பதால் “மனோச்சித்ரா” என்ற பிரபல வார்த்தையில் இருந்து மனோ என்ற பெயரை அவருக்கு சூட்டினாராம் இளையராஜா.