இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம்… அன்னக்கிளி படம்தானே?... அதுதான் இல்ல…
தமிழ் சினிமாவின் இசை மன்னனாக திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தவர். மூன்று தலைமுறையாக இசை ராஜ்ஜியம் நடித்திவரும் இசை சக்கரவர்த்தி.
1970களில் இருந்து இப்போது வரை தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறவர். இப்போதும் கூட அவரது இசையின் வயது பதினாறுதான். அந்த அளவுக்கு இக்கால தலைமுறையினருக்கும் ஏற்றார் போல் தனது இசையை தகவமைத்துக்கொண்டவர். இவ்வாறு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இளையராஜா சமீபத்தில் ராஜ்ய சபாவின் நியமன எம்பியாகவும் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு பெரும் புகழுக்குச் சொந்தக்காரரான இளையராஜா, தமிழ் சினிமாவில் “அன்னக்கிளி” என்ற திரைப்படம் மூலம்தான் அறிமுகமானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அத்திரைப்படம் இளையராஜா அறிமுகமான திரைப்படம்தானே தவிர அது அவரின் முதல் திரைப்படம் இல்லை. ஆம்!
இளையராஜா “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு முன்பே ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அத்திரைப்படத்தின் பெயர் “தீபம்”. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படத்தை டி.ஆர்.ரகுனாத் என்பவர் இயக்கியிருந்தார்.
“தீபம்” திரைப்படத்திற்காக ஒரு பாடலையும் பதிவு செய்திருந்தார் இளையராஜா. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் “தீபம்” திரைப்படத்தின் பணிகள் நின்றுவிட்டன. ஒரு வேளை இந்த திரைப்படம் முழுமையடைந்திருந்தால் இளையராஜா அறிமுகமான திரைப்படமாக “தீபம்” இருந்திருக்கும்.
இதே போல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக முடிவு செய்திருந்தார். அத்திரைப்படத்திற்கு கவிஞர் வாலி கதை எழுத, இளையராஜா சில பாடல்களை பதிவு செய்திருந்தார். ஆனால் அத்திரைப்படமும் சில காரணங்கள் நின்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.