சம்பளமே வேண்டாம்!! இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி…
இசைஞானி இளையராஜா மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் இசை ராஜ்ஜியத்தை நடத்திவருபவர். தமிழின் பல முன்னணி நடிகர்களின் வெற்றிக்கு ஒரு பெரிய பங்காற்றியது இவரின் இசைதான். ஒரு திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றால் அத்திரைப்படம் பெரிய லெவலில் வியாபாரம் ஆகிவிடும். அந்த அளவுக்கு திரையுலகையே தன் கைக்குள் வைத்திருந்தவர் இளையராஜா.
தினமும் இவரது ஸ்டூடியோவில் பல தயாரிப்பாளர்கள் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. ஒரு நாளுக்கு இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு இளையராஜா புகழ் பெற்று திகழ்ந்தார். இப்போதும் தனது ஆத்மார்த்தமான இசையை புதுமைகள் கலந்து வழங்கிவருகிறார் இளையராஜா.
அதுமட்டுமல்லாது தற்போது ராஜ்ய சபாவின் எம் பி ஆகவும் இருக்கிறார். பண்ணைபுரத்தில் கிளம்பிய இவரது பாதம், தற்போது பாராளுமன்றம் வரை சென்றிருக்கிறது என்றால் இசை மீதுள்ள காதலும், வெறித்தனமான உழைப்பும்தான் காரணம்.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பி வாசு, ஒரு பேட்டியில் இளையராஜா குறித்த ஒரு வியக்கத்தக்க தகவலை பகிர்ந்துகொண்டார். 1981 ஆம் ஆண்டு பி வாசு-சந்தான பாரதி ஆகியோர் இணைந்து இயக்கிய முதல் திரைப்படம் “பன்னீர் புஷ்பங்கள்”. இதில் பிரதாப் போத்தன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜாவை புக் செய்வதற்காக வாசுவும் சந்தான பாரதியும் அவரது ஸ்டூடியோவிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது இளையராஜா தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர். இளையராஜா அப்போது வாங்கிய சம்பளம் ஒரு லட்சத்திற்கும் அதிகம். ஆனால் “பன்னீர் புஷ்பங்களின்” பட்ஜெட்டே 5 லட்சம்தானாம்.
இளையராஜா, பி வாசு-சந்தான பாரதி ஆகியோரிடம் கதை கேட்டிருக்கிறார். கதை நன்றாக இருக்கிறது என இளையராஜாவும் இசையமைக்க ஒத்துகொண்டிருக்கிறார். ஆனால் சம்பளம் குறித்து இளையராஜா பேசவே இல்லையாம். படத்தின் ரீ ரெக்கார்டிங்கிற்கு பிறகு இயக்குனர்களே இளையராஜாவிடம் சம்பளம் குறித்து கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு இளையராஜா “இலவசம்” என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு இயக்குனர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அதன்பின் பேசிய இளையராஜா “முதல்படம் பண்ணுகிறீர்கள். நன்றாக பண்ணுங்கள், பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என கூறியிருக்கிறார். “பன்னீர் புஷ்பங்கள்” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் ஆனது.
இயக்குனர் ஸ்ரீதரிடம் பி. வாசுவும் சந்தான பாரதியும் உதவி இயக்குனர்களாக இருந்தபோது “இளமை ஊஞ்சலாடுகிறது” திரைப்படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் கூறியிருக்கிறார்கள். முதலில் இவர்களின் மேல் கோபப்பட்ட ஸ்ரீதர் அதன் பிறகு இளையராஜாவை தனது திரைப்படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கிறார்.
இந்த நிகழ்வை ஞாபகம் வைத்திருந்த இளையராஜா, “பன்னீர் புஷ்பங்கள்” திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்திருக்கிறார்.